மின்சார இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களை தயாரிக்கும் Zelio E-Mobility நிறுவனம், கோயம்புத்தூரில் புதிய ஆலையைத் தொடங்கியுள்ளது.
சுமார் 39,000 சதுர அடி பரப்பளவில், கோயம்புத்தூரின் லட்சுமி நகர், கண்ணம்பாளையம், நாகியான் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலை, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனையை அதிகரிப்பதோடு, வாகனங்களை விற்பனையாளர்களிடம் விரைவாக கொண்டு சேர்க்கவும் உதவும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆலையில் ஆண்டுக்கு 60,000 மின்சார இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் திறன் உள்ளது. ஆனால் ஆரம்ப கட்டத்தில் ஆண்டுக்கு 24,000 முதல் 30,000 வாகனங்கள் மட்டுமே தயாரிக்கப்படும். பின்னர், சந்தைத் தேவைக்கு ஏற்ப உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்படும்.
அடுத்த 1 முதல் 2 ஆண்டுகளில், மேலும் பல டீலர்களை சேர்ப்பது, வாகன சேவையை மேம்படுத்துவது மற்றும் வாகனங்களை விரைவாக வழங்குவது ஆகியவற்றில் நிறுவனம் கவனம் செலுத்தவுள்ளது.
தற்போது இந்த ஆலையில் 30 பேர் பணிபுரிகின்றனர். விரைவில் 100-க்கும் மேற்பட்ட புதிய பணியாளர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதன் மூலம், இந்த நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 500-ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குணால் ஆர்யா கூறுகையில், “தென்னிந்தியா மின்சார வாகனங்களுக்கு மிக முக்கியமான சந்தையாக உள்ளது. இந்த புதிய ஆலை மூலம் வாடிக்கையாளர்களுக்கு வேகமாகவும் சிறப்பாகவும் சேவை வழங்க முடியும். மேலும், இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் இது உதவும்,” என்றார்.
ஏற்கனவே ஹரியானாவின் லட்வா மற்றும் பதான், ஒடிசாவின் கட்டாக் ஆகிய இடங்களில் Zelio E-Mobility நிறுவனத்தின் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
கோயம்புத்தூர் ஆலை தொடங்கப்படுவதற்கு முன்பு, ஆண்டுக்கு 1.80 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் திறன் நிறுவனத்திடம் இருந்தது. இந்த புதிய ஆலை செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம், நிறுவனத்தின் மொத்த உற்பத்தித் திறன் 33 சதவீதம் அதிகரித்து, தற்போது ஆண்டுக்கு 2.40 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளது.









