இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை, உள்நாட்டு உற்பத்தி, தனியார் பங்கேற்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவற்றின் வேகமான முன்னேற்றத்தால் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்று வருகிறது. நாட்டின் பாதுகாப்பு உற்பத்தி தற்போது சுமார் ரூபாய் 1.51 லட்சம் கோடியாக உள்ளது. இதில் தனியார் துறையின் பங்கு ரூபாய் 33,000 கோடி. தற்போதைய 25 சதவீத பங்களிப்பை 50 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக உயர்த்துவது அரசின் இலக்காகும்.
இந்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது பாதுகாப்புத் துறை தளவாட (Defence Logistics) சந்தையாகும். சுமார் 12 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த சந்தை ஆண்டுக்கு சராசரியாக 8.6 சதவீத கூட்டு வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளருமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தும் வகையில், டிவிஎஸ் மொபிலிட்டி குழுமத்தின் அங்கமான டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் (TVS SCS), இத்தாலியைச் சேர்ந்த விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை சப்ளை செயின் ஒருங்கிணைப்பு நிறுவனமான ALA குழுமத்துடன் கூட்டு நிறுவனத்தை அமைத்து, அதிக லாபம் தரும் இந்தத் துறையில் களமிறங்கியுள்ளது.
இந்தியாவில் உருவாகி வரும் வாய்ப்புகளை இலக்காகக் கொண்டுள்ள இந்தக் கூட்டு நிறுவனம், அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் ரூபாய் 2,000 கோடி வருவாயை ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இருப்பினும், சந்தையில் உள்ள மிகப்பெரிய வாய்ப்புகளைப் பார்க்கும்போது இந்த இலக்கு மேலும் உயர வாய்ப்புள்ளது.
விண்வெளி–பாதுகாப்புத் துறையில் பெரும் வாய்ப்புகள்
Airbus, Boeing, Dassault Aviation, Safran Group, Rolls-Royce, Collins Aerospace, Thales Group உள்ளிட்ட பல உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் உற்பத்தி மற்றும் உள்ளூர் மயமாக்கல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகின்றன. இந்திய நிறுவனங்களுடன் கூட்டாண்மைகள் மற்றும் கூட்டு நிறுவனங்களையும் அவை தொடர்ந்து அமைத்து வருகின்றன.
கிரிசில் ரேட்டிங்ஸ் அண்மையில் வெளியிட்ட ஆய்வின்படி, தனியார் பாதுகாப்புத் துறையின் வருவாயில் 42 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 24 நிறுவனங்களின் வருவாய், 2026-27 நிதியாண்டில் 15–16 சதவீதம் வளர்ந்து ரூபாய் 20,000 கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ரூபாய் 50,000 கோடி மதிப்பிலான வலுவான ஆர்டர் புத்தகம் ஆதாரமாக உள்ளது. மேலும், இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளில் 75 சதவீதத்தை உள்நாட்டு உற்பத்தியிலிருந்து பெற வேண்டும் என்ற ‘ஆத்மநிர்பர்’ கொள்கையும் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.
“உற்பத்தித் துறையிலும், விற்பனைக்குப் பிந்தைய சேவை மற்றும் சப்ளை செயின் தேவைகளுக்காகவும் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளில் கணிசமான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் (TVS SCS) நிறுவனத்தின் செயல் தலைவர் ஆர். தினேஷ் தெரிவித்தார். நிறுவனத்தின் பாதுகாப்புத் துறை வருவாயில் சுமார் 30 சதவீதம் இங்கிலாந்திலிருந்து கிடைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சான்றிதழ் சவாலும் புதிய கூட்டாண்மையும்
இந்தத் துறையில் செயல்படுவதற்கு தேவையான சான்றிதழ்களைப் பெறுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கு முன்பே சான்றிதழ் பெற வேண்டிய நிலை அல்லது இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் முதலீடு செய்து சான்றிதழ் பெற்று பின்னர் சந்தையை அணுக வேண்டிய சூழல் உள்ளது.
“இதனை சிறப்பாகச் செயல்படுத்த இந்தியாவில் ALA குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம், மற்றும் பல வாடிக்கையாளர்களையும் சந்தித்தோம் அவர்களிடமிருந்து மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது,” என்றும் தினேஷ் தெரிவித்தார்.
விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை சப்ளை செயின் சேவைகள், சிறப்பு கொள்முதல், துல்லியமான சரக்கு மேலாண்மை மற்றும் பணி முக்கியத்துவம் வாய்ந்த விநியோக திறன்களை உள்ளடக்கிய உயர்மதிப்புடைய துறையாகும். இதனால் தரமான நிறுவனங்கள் 8–9 சதவீத வரிக்கு முந்தைய லாப விகிதத்தையும், அதிக முதலீட்டு வருமானத்தையும் பெறுகின்றன.
ALA குழுமத்தின் துணைத் தலைவர் மற்றும் இணை நிறுவனர் விட்டோரியோ ஜென்னா கூறுகையில், “உலகளாவிய விண்வெளி நிறுவனங்களுடன் எங்களுக்கு வலுவான உறவுகள் உள்ளன. அவை இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகின்றன. டிவிஎஸ் எஸ்சிஎஸ் (TVS SCS) உடனான இந்தக் கூட்டாண்மை, இந்தியாவில் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்ய உதவும்” என்றார்.
கூட்டு நிறுவனத்தின் அமைப்பு
இந்தக் கூட்டு நிறுவனம், டிவிஎஸ் பேக்கேஜிங் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் செயல்படும். 2017 ஏப்ரல் 28-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் ரூபாய் 10.19 கோடியும், ALA குழுமம் ரூபாய் 9.80 கோடியும் முதலீடு செய்யும். பங்கீட்டு விகிதம் முறையே 51:49 ஆகும்.
முதலீட்டு செயல்முறை செப்டம்பர் 30-க்குள் நிறைவடையும் என்றும், இந்த ஆண்டு நவம்பரில் செயல்பாடுகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இந்திய சந்தையில் கவனம் செலுத்தும் இந்த நிறுவனம், பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச சந்தைகளிலும் விரிவடைய திட்டமிட்டுள்ளது.
அதிக லாபம் தரும் புதிய தளம்
இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைக்கான உற்பத்தி ஆலைகளை அமைக்கும் அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் நிலையில், டிவிஎஸ் எஸ்சிஎஸ் (TVS SCS) இந்தத் துறையில் களமிறங்கியுள்ளது. வழக்கமான போக்குவரத்து மற்றும் தளவாடத் துறையில் காணப்படும் 4–5 சதவீத வரிக்கு முந்தைய லாப விகிதத்தை விட, இந்தத் துறையில் 8–9 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் என்பதால், இது நிறுவனத்திற்கு புதிய வளர்ச்சி வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(இக்கட்டுரை இண்டஸ்ட்ரியல் எகனாமிஸ்ட்டில் வெளியான அசல் கட்டுரையின் தமிழாக்கம். தமிழாக்கம்: Dhanalakshmi Baskaran)









