இந்தியாவின் சூரிய மின் உற்பத்தித் திறன் கடந்த 2014ஆம் ஆண்டை விட 57 மடங்கு அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மக்களவையில் மின் உற்பத்தித் திறன் குறித்து நேற்று எழுப்பபட்ட கேள்விக்கு, மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி விளக்கம் அளித்துள்ளார். அதில், 2013-14ஆம் ஆண்டில் இந்தியாவின் சூரிய மின் உற்பத்தித் திறன் வெறும் 2.82 ஜிகாவாட்டாக இருந்தது. தற்போது அது 162.15 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த 10 ஆண்டுகளில் சூரிய மின் உற்பத்தித் திறன் சுமார் 57 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
மேலும், சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பான IRENA வெளியிட்ட 2026ஆம் ஆண்டுக்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் புள்ளிவிவர அறிக்கையின்படி, உலகிலேயே அதிக சூரிய மின் உற்பத்தித் திறன் கொண்ட நாடுகளில் இந்தியா தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.
நாடு முழுவதும் 14 மாநிலங்களில் மொத்தம் 39,461 மெகாவாட் திறன் கொண்ட 56 சோலார் பூங்காக்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், 18,919 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் திட்டங்கள் ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்துவிட்டன.
2026 ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் மொத்த சூரிய மின் உற்பத்தித் திறன் 162.15 ஜிகாவாட்டாக உள்ளது. இதில், 125.60 ஜிகாவாட் — பெரிய அளவிலான சூரிய மின் திட்டங்கள், 30.11 ஜிகாவாட் — வீடுகள் மற்றும் கட்டிடங்களின் மாடி சோலார் திட்டங்கள், 6.43 ஜிகாவாட் — மின்கம்பிகள் இல்லாத பகுதிகளுக்கான ஆஃப்-கிரிட் சோலார் திட்டங்கள் என சூரிய மின் உற்பத்தி பல்வேறு வகைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.









