வேளாண் மேம்பாட்டு திட்டங்களில் ரூ.24,000 கோடி முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
புதுடெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றிருந்தது. இந்த கூட்டத்தில் தன் தானிய வேளாண் திட்டத்துக்கு (dhan dhanya krishi yojana) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் 100 மாவட்டங்களில், நடப்பு நிதியாண்டிலிருந்து 6 ஆண்டுகள் வரை இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன் தானிய வேளாண் திட்டம் என்றால் என்ன?
வேளாண் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், பல்வகை பயிர் வளர்ப்பை ஊக்குவித்தல், நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவித்தல், அறுவடைக்குப் பிறகான தானிய சேமிப்புத் திறனை அதிகரித்தல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல், விவசாயிகளுக்குக் கடன்கள் கிடைப்பதை எளிதாக்குதல் ஆகியவை தன் தானிய வேளாண் திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.

ஏற்கனவே வேளாண் துறையில் அமலில் இருக்கும் 36 திட்டங்கள், மாநில அரசுகளின் திட்டங்கள் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டு, மத்திய மாநில அரசுகள் மற்றும் தனியார் துறையினர் கூட்டு ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுமென மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குறைந்த உற்பத்தித்திறன், குறைந்த பயிர் சாகுபடி, விவசாயிகளுக்குக் குறைந்த கடன் வழங்கப்படுதல் என குறைபாடுகள் இருக்கும் 100 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் குறைந்தபட்சம் ஒரு மாவட்டம் தேர்ந்தெடுக்கப்படும். இந்த திட்டத்தால் நாடு முழுவதும் 1.7 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.









