நிதி

தவெக அரசின் முதல் பட்ஜெட்… வெளியானது முக்கிய அறிவிப்பு!

2026–2027 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் இன்று அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் விஜய் தலைமையில், வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாநில பட்ஜெட்டும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6 ஆம் தேதி தமிழக வேளாண் பட்ஜெட்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

தவெக அரசு பதவியேற்று மூன்று மாதங்கள் ஆகும் நிலையில், இந்த பட்ஜெட் மீது தமிழக மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் தமிழக நிதித்துறை அமைச்சரான மரியே வில்சன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் ரூ.1 லட்சத்திற்கும் மேல் கடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் சொத்து வரி வருவாய் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. மேலும், நிதிக் கடனைக் குறைப்பதில் தவெக அரசு அதிக கவனம் செலுத்தி வருவதால், இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்க வாய்ப்பு மிகவும் குறைவு என வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய்த் துறையில் உள்ள இழப்புகளைச் சரிசெய்து, ஊழலைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் மீதுள்ள கடன் சுமையைக் குறைத்து, மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் சரிசெய்யும் வகையில், பட்ஜெட்டில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய மாற்றங்கள் இடம்பெறப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts