வணிகம்

ஏர் ஆம்புலன்ஸ்.. ePlane – அப்போலோ மருத்துவமனை ஒப்பந்தம்…

பல உயிர்களை காப்பாற்றும் வகையில் மின்சார ஏர்(வான்வழி) ஆம்புலன்ஸ்களை பயன்படுத்தும் நோக்கில், தி இ-பிளேன் கம்பெனி (The ePlane Company) மற்றும் அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளன.

இந்தியாவில் ஒவ்வொரு 3.5 நிமிடங்களுக்கும் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார்கள்; ஆண்டுதோறும் சுமார் 1.7 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள்; அதிலும், விபத்துக்குப் பிறகு மிக முக்கியமான, ‘Golden Hour’ எனப்படும் முதல் ஒரு மணி நேரத்திற்குள் வெறும் 20 சதவீத நோயாளிகள் மட்டுமே உரிய அவசர சிகிச்சையைப் பெறுகிறார்கள்; இது போன்ற அவசர நிலைகளில் நோயாளிகளை சில நிமிடங்களிலேயே சிறப்பு சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ePlane நிறுவனம் உருவாக்கியுள்ள e200X Electric Air Ambulance மூலம் விபத்து நோயாளிகளை விரைவாக கொண்டு செல்ல முடியும்; மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற அவசர நோயாளிகளை துரிதமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம்; உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்புகளை வேகமாக எடுத்துச் செல்ல முடியும்; சாலை போக்குவரத்தை விட 7 மடங்கு வேகமாக நோயாளிகளை கொண்டு செல்லும் திறன் கொண்டது; பாரம்பரிய ஹெலிகாப்டர் சேவையை விட குறைந்த செலவில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தங்கள் நிறுவனத்தின் Amber Wings மருத்துவ ட்ரோன்கள் மூலம் இரத்தப் பைகள் (blood products), உறுப்புகள் (organs), தடுப்பூசிகள் (vaccines), மருந்துகள் (Medicines), ஆய்வக மாதிரிகள் (lab samples) ஆகியவற்றை மருத்துவமனைகளுக்கு இடையே மிகக் குறுகிய நேரத்தில் கொண்டு செல்ல முடியும் என ePlane நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியா முழுவதும், தங்களுக்கு சிறந்த மருத்தவ கட்டமைப்பு இருப்பதாகவும், தங்களுடன் ePlane-ன் வான்வழி சேவைகள் இணைவதால், நகரங்களிலும் தொலைதூர பகுதிகளிலும் அவசர மருத்துவ சேவையை மிக வேகமாக வழங்க முடியும் என்றும் அப்போலோ குழுமத்தின் தலைவர் Dr.பிரதாப் ரெட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Posts