தொழில்நுட்பம்

ஒடிசாவில் புதிய ஏஐ தரவு மையம் அமைக்கும் HCL…

HCLTech நிறுவனம், ஒடிசா அரசு மற்றும் Sarvam நிறுவனத்துடன் இணைந்து, ரூ.14,257 கோடி முதலீட்டில் ஒடிசாவில் புதிய ஏஐ தரவு மையத்தையும், புவனேஸ்வரில் உலகளாவிய தொழில்நுட்ப மையத்தையும் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த முதலீட்டின் மூலம், HCLTech நிறுவனத்தின் முழுமையான ஏஐ திறன்களையும், Sarvam நிறுவனத்தின் அடிப்படை ஏஐ மாதிரிகளையும் பயன்படுத்தி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குத் தேவையான ஏஐ சேவைகள் வழங்கப்பட உள்ளன. மேலும், இந்தியாவின் தரவுகளை நாட்டிலேயே பாதுகாப்பாக வைத்துப் பயன்படுத்தும் Sovereign AI திட்டத்திற்கும் இது உதவும்.

இந்தத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU), ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, மாநில அமைச்சர் முகேஷ் மஹாலிங், HCLTech தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, HCLTech தலைமைச் செயல் அதிகாரி சி. விஜயகுமார் மற்றும் Sarvam நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரத்யுஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

மேலும், ஏஐ சார்ந்த டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதற்காக, புவனேஸ்வரில் உலகளாவிய தொழில்நுட்ப மையம் அமைக்க ஒடிசா அரசுடன் HCLTech நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 2028-ஆம் ஆண்டுக்குள் இந்த மையம் தொடங்கப்படும் எனவும், இதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏஐ தரவு மையத்துடன் இணைந்து இந்த உலகளாவிய தொழில்நுட்ப மையமும் செயல்படும்.

“HCLTech நிறுவனம் இந்திய தொழில்நுட்பத் துறையில் முன்னோடியாகத் திகழ்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா மற்றும் ஆத்மநிர்பர் பாரத் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, முதலீடுகள் மற்றும் கூட்டாண்மைகள் மூலம் இந்தியாவின் Sovereign AI சூழலை வலுப்படுத்த நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஒடிசா அரசும், Sarvam நிறுவனமும் இணைந்து செயல்படுத்தும் இந்த முயற்சியைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்,” என HCLTech நிறுவனத்தின் தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

HCLTech நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சி. விஜயகுமார் கூறுகையில், “எங்களின் AI சேவையில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். இதன் மூலம், இந்தியாவில் அதிகரித்து வரும் Sovereign AI தேவையைப் பூர்த்தி செய்வதுடன், Sarvam நிறுவனத்துடனான கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்த முடியும். சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் முன்னேற்றமான கொள்கைச் சூழலைக் கொண்ட ஒடிசா அரசுடன், Sarvam நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஆவலுடன் உள்ளோம்,” என்றார்.

Sarvam நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரத்யுஷ் குமார் கூறுகையில், “ஒடிசாவில் அமைக்கப்படும் AI பூங்கா, உயர் செயல்திறன் கொண்ட கணினி வசதிகளையும், இந்தியாவில் உருவாக்கப்பட்ட AI மாதிரிகளையும், நடைமுறை பயன்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் முக்கிய மையமாக இருக்கும். HCLTech நிறுவனத்துடன் இணைந்து, Sarvam நிறுவனத்தின் முழுமையான AI திறன்களை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்றார்.

“HCLTech நிறுவனத்தின் வருகையால், இந்தியாவின் அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக புவனேஸ்வர் மேலும் வலுவான இடத்தைப் பெறும்,” என்று ஒடிசா அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் விஷால் குமார் தேவ் தெரிவித்தார்.

இந்தியா, உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பச் சந்தைகளில் ஒன்றாகும். HCLTech நிறுவனத்திற்கும் இந்தியா முக்கியமான வளர்ச்சிச் சந்தையாக உள்ளது.

இந்தியாவில், நொய்டா, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், புனே, லக்னோ, நாக்பூர், மதுரை, விஜயவாடா மற்றும் GIFT சிட்டி உள்ளிட்ட நகரங்களில் அமைந்துள்ள தொழில்நுட்ப வளாகங்கள் மற்றும் மையங்களின் மூலம் 1.70 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களை HCLTech நிறுவனம் பணியமர்த்தியுள்ளது.

Related Posts