கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்டுள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.75,000 வரை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் பதவியேற்ற 15 நாட்களுக்குள், கடந்த மே மாதம் 25 ஆம் தேதி, குறு, சிறு மற்றும் இதர விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க்கடனில் 50,000 ரூபாய் வரையிலான கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.
கடன் தள்ளுபடி குறித்து தமிழ்நாடு முழுவதுமிருந்து பல்வேறு விவசாய அமைப்புகளிடமிருந்து சில கோரிக்கைகள் எழுந்த நிலையில், விதி எண் 110-ன் கீழ் முதல்வர் விஜய் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, 75,000 ரூபாய் வரை பெற்றுள்ள பயிர்க்கடன்கள் 100 சதவிகிதம் முழுமையாக தள்ளுபடி; 75,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை பெற்றுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக 75,000 ரூபாய் வரை தள்ளுபடி; 1,00,000 ரூபாய்க்கு மேல் பெற்றுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக 35,000 ரூபாய் வரை தள்ளுபடி என அறிவிக்கபட்டுள்ளது.
இதன்மூலம், 75,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள 2,38,264 விவசாயிகளுக்குத் தலா 75,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும். மொத்தம் 14.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,932.23 கோடி அளவிலான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது.









