நிதி

இந்தியாவிற்கு 10% கூடுதல் இறக்குமதி வரி விதித்த அமெரிக்கா!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில், “கட்டாய உழைப்புடன்” தயாரிக்கப்படும் பொருட்களுக்கு 10% கூடுதல் வரி விதித்துள்ளது அமெரிக்க அரசு.

தொழிலாளர்களை வலுக்கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதற்கு அமெரிக்கா கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாகத் தடை விதித்து வருகிறது. அதேபோல் மற்ற வர்த்தக நாடுகளும் அவ்வாறே செய்ய வேண்டும். இதன் காரணமாக, 1974-ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301-ன் கீழ் அமெரிக்கா இந்த புதிய வரியை விதிப்பதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரியர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வெளியிட்டுள்ள 60 நாடுகளின் பட்டியலில், கட்டாய உழைப்புக்குத் தடை விதித்துள்ள இந்தியா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட 17 நாடுகளுக்கு குறைந்த அளவான 10% வரி விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கட்டாய உழைப்புக்கு எதிராக முறையான சட்டங்களைக் கொண்டு வராத சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு 12.5% வரி விதிக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 12.5% கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. ஆனால் கடந்த ஜூன் 14-ஆம் தேதி, இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையில் சில முக்கிய திருத்தங்களைக் கொண்டு வந்ததால், இந்தியாவிற்கான கூடுதல் வரி 12.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் நிறுவனத்தின் நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா தனது லிங்க்ட்இன் பதிவில் தெரிவித்துள்ளார்.

10

அமெரிக்க உள்நாட்டுச் சந்தையில் தட்டுப்பாடு நிலவக்கூடிய மூலப்பொருட்கள், அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கக் கூடிய அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருட்கள், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உரங்கள் மற்றும் தேசியப் பாதுகாப்பு வரம்பிற்குள் வரும் எஃகு, அலுமினியம் போன்றவற்றுக்கு இந்த புதிய வரி விதிப்பு பொருந்தாது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னர் கொண்டுவந்த 10% உலகளாவிய தற்காலிக வரி, 150 நாள்களுக்குப் பிறகு முடிவுக்கு வருகிறது. அதற்குப் பதிலாகவே தற்போது 1974-ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301-ஐ பயன்படுத்தி, சட்டரீதியாக இந்த புதிய வரிகளை டிரம்ப் அரசு அமல்படுத்தியுள்ளது.

Related Posts