நிதி

மேற்காசிய பதற்றம்.. சிமெண்ட் உற்பத்தியாளர்களின் லாபம் பாதிப்பு!

மேற்கு ஆசியாவில் தொடர்ச்சியாக மோதல் நடந்துவருவதால் மூலப்பொருட்களின் செலவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சிமெண்ட் உற்பத்தியாளர்களின் செயல்பாட்டு லாப வரம்பு (operating margin), 2026-2027 நிதியாண்டில் ஒரு டன்னுக்கு ரூ. 50 முதல் 75 வரை பாதிக்கப்படக்கூடும்.

உள்நாட்டு சிமெண்ட் உற்பத்தித் திறனில் சுமார் 90 சதவீதத்தைக் கொண்டுள்ள 18 நிறுவனங்கள் குறித்து ‘கிரிசில் ரேட்டிங்ஸ்’ (Crisil Ratings) ஆய்வு நடத்தியது. அதன் அடிப்படையில், 2026-ஆம் நிதியாண்டில் ஒரு டன்னுக்கு ரூ. 1,000-ஆக இருந்த செயல்பாட்டு லாப வரம்பு (operating margin), 2027-ஆம் நிதியாண்டில் ரூ. 925 முதல் ரூ. 950 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

விற்பனை வருவாய் அதிகரித்ததன் காரணமாக, 2026 நிதியாண்டில் செயல்பாட்டு லாப வரம்பு ஒரு டன்னுக்கு ரூ. 1,000 ஆகக் கணிசமாக உயர்ந்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சிமெண்ட் விலையில் காணப்பட்ட ஏற்றம் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டிலும் தொடர்கிறது; சரக்கு மற்றும் சேவை வரி (GST) விகிதம் குறைந்த போதும், இந்த நிதியாண்டில் விலைகள் 1 முதல் 3 சதவீதம் வரை உயரக்கூடும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

புவிசார் அரசியலில் நிச்சயமற்ற சூழல் நிலவி வருவதால், பெட்கோக் (petcoke) மற்றும் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. அதன் காரணமாக,மின்சாரம் மற்றும் எரிபொருள் செலவுகள் அதிகரிக்கின்றன. மொத்த செலவில் 30 சதவீதத்தை அவை பிடிப்பதால், லாப வரம்பின் (margin) மீதான தாக்கத்திற்கு அவை முக்கிய காரணமாக அமையும் என்று ‘கிரிசில் ரேட்டிங்ஸ்’ (Crisil Ratings) நிறுவனத்தின் இயக்குனர் ஆனந்த் குல்கர்னி தெரிவித்தார்.

மேலும், டீசல் விலை உயர்வால், மொத்தச் செலவில் கால் பங்கை வகிக்கும் சரக்குக் கட்டணங்களும் தொடர்ந்து அதிகமாகவே இருக்க வாய்ப்புள்ளது. ஆண்டின் பிற்பகுதியில் கச்சாப் பொருட்களின் விலை குறைந்து, செலவுகளால் ஏற்படும் அழுத்தம் குறையும்வரை, ஆண்டின் முதல் பாதியில் இந்தத் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

பசுமை ஆற்றல் பயன்பாட்டை சிமென்ட் உற்பத்தியாளர்கள் அதிகரிப்பது, இந்தச் செலவு அழுத்தங்களை ஓரளவு தணிக்கும் என்று கிரிசில் கூறியது.

தற்போது மொத்த மின்சார நுகர்வில் 35-40 சதவீதம் பசுமை ஆற்றலாக உள்ளது. சிமென்ட் உற்பத்தியாளர்கள், ஆற்றல் பெரும் வகைகளை பல்வகைப்படுத்தாமல் இருந்திருந்தால், லாபத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருந்திருக்கும் என்று அது குறிப்பிட்டது.
சிமெண்ட் தேவையில் 6–7 சதவீதம் நிலையான வளர்ச்சி இருக்கும் என்பதால், சிமெண்ட் உற்பத்தியாளர்களின் செயல்பாட்டு பணப்புழக்கம் (Operating Cash Flow) வலுவாகவே தொடரும்,” என்று கிரிசில் இன்டலிஜென்ஸ் (CRISIL Intelligence) நிறுவனத்தின் இயக்குநர் செஹுல் பட்ட் (Sehul Bhatt) தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டின் மொத்த சிமெண்ட் பயன்பாட்டில் சுமார் மூன்றில் ஒரு பங்கு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கே செல்கிறது. எனவே, அரசின் அதிகரித்த மூலதனச் செலவினம் (Capital Expenditure) உள்கட்டமைப்புத் திட்டங்களை வேகமாக செயல்படுத்தவும், அதன் மூலம் சிமெண்ட் தேவையை அதிகரிக்கவும் உதவும் என்றார்.

“சராசரிக்கும் குறைவான பருவமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால், விவசாய வருமானம் அழுத்தத்தை சந்திக்கலாம். இதன் காரணமாக, மொத்த சிமெண்ட் தேவையில் சுமார் 30 சதவீத பங்கைக் கொண்டுள்ள கிராமப்புற வீட்டு கட்டுமானத் தேவை பலவீனமடையும். ஆனால், இதன் தாக்கத்தை உள்கட்டமைப்பு மற்றும் பிற துறைகளின் தேவை ஈடுகட்டும்,” என்று பட்ட் கூறினார்.

மேலும், இந்த நிதியாண்டில் நகர்ப்புற வீட்டு கட்டுமானத் தேவை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, வீட்டு கடன் வட்டி விகிதங்கள் சாதகமான நிலையில் இருப்பதும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா–நகர்ப்புற (PMAY-U) திட்டத்தின் கீழ் அதிகளவிலான வீட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதும் முக்கிய காரணங்களாக உள்ளன.

(இக்கட்டுரை இண்டஸ்ட்ரியல் எகனாமிஸ்ட்டில் வெளியான அசல் கட்டுரையின் தமிழாக்கம்.

தமிழாக்கம்: வீரச்செல்வி மதியழகன்.)

Related Posts