வணிகம்

அதிகரிக்கும் தங்கம், வெள்ளி விலை!

மேற்காசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெயில் முதலீடு மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது. இதன் காரணமாக, சில வாரங்களுக்கு முன்பு வரை தங்கத்தின் விலை கடுமையான சரிவை சந்தித்தது.

ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சனிக்கிழமை முதல் தங்கத்தின் விலை மீண்டும் கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது.

பொதுவாக உலகளவில் போர் பதற்றம் அதிகரிக்கும் போது, முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை போன்ற முதலீடுகளில் இருந்து, தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பாதுகாப்பான முதலீட்டுகளுக்கு தங்கள் முதலீட்டை மாற்றுகின்றனர். இதன் காரணமாக அவற்றின் விலை உயரும்.

இந்தியாவின் பயன்படுத்தபடும் தங்கத்தில் பெரும்பகுதி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், உலக சந்தையில் தங்கத்தின் விலை உயரும் பொழுது இந்திய சந்தையிலும் நேரடியாக எதிரொலிக்கும்.

இதுமட்டுமின்றி, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாததும் இந்த விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அதன் விளைவாக, நீண்ட நாட்களுக்குப் பிறகு உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,000 டாலரைத் தாண்டியுள்ளது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 1.17% உயர்ந்து 4,124 டாலராக வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் 1.70% உயர்ந்து 60.115 டாலராக வர்த்தகமாகி வருகிறது.

இதன் தாக்கமாக, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,07,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சனிக்கிழமை முதல் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

Related Posts