நிதி

ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% உயர்த்திய RBI

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்படுவதாக RBI அறிவித்துள்ளது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம்தான் ரெப்போ வட்டி. இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கும். அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 2023க்குப் பிறகு முதல்முறையாக ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு, தற்போது 5.50 சதவீதமாக உள்ளது.

அமெரிக்கா – ஈரான் மோதலால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலரை கடந்துள்ளது. உலகச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இருந்தபோதிலும், இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருப்பதாக RBI தெரிவித்துள்ளது.

மேலும், நடப்பு நிதியாண்டிற்கான மொத்த GDP வளர்ச்சி கணிப்பை RBI உயர்த்தியுள்ளது. ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கூட்டத்தில், 2026-27 நிதியாண்டிற்கான GDP வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் மாதக் கூட்டத்தில் இந்தக் கணிப்பு 7.1 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 2026-27 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டிற்கான GDP வளர்ச்சி கணிப்பு 6.4 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், மூன்றாம் காலாண்டிற்கான வளர்ச்சி கணிப்பு 6.5 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் பிற கடன்களுக்கான வட்டி விகிதங்களும் உயர வாய்ப்புள்ளது. இதன் தாக்கம் பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கக்கூடும்.

குறிப்பாக, வீட்டுக் கடன், கார் கடன் உள்ளிட்ட கடன்களின் மாதாந்திர EMI தொகை அதிகரிக்கலாம் அல்லது அதே EMI தொகையைத் தொடர்ந்து செலுத்தும் நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் அதிகரிக்கலாம். அதாவது, மாதந்தோறும் செலுத்தும் EMI தொகை ஒரே மாதிரியாக இருந்தாலும், நீங்கள் நீண்ட காலத்திற்கு EMI செலுத்தவேண்டி இருக்கும்.

Related Posts