நிதி

EPFO: ஊழியர்களை சேர்க்க நிறுவனங்களுக்கு வேண்டுகோள்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), Employees’ Enrolment Campaign 2026 (EEC 2026) திட்டத்தை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இத்திட்டம் 29 ஜூன் 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஏப்ரல் 2009 முதல் 31 மார்ச் 2026 வரை EPF திட்டத்தில் சேர்க்கப்படாமல் இருந்த தகுதியான ஊழியர்களை நிறுவனங்கள் EPF-ல் சேர்க்கலாம்.

இதற்காக நிறுவனங்களுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முன்பு ஊழியரின் பங்களிப்புத் தொகை பிடித்தம் செய்யப்படாமல் இருந்திருந்தால், திட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்தத் தொகைக்கு விலக்கு வழங்கப்படும்.

இந்தச் சிறப்பு திட்டம் 2026 அக்டோபர் 31 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். நிறுவனங்கள், தற்போது தங்களிடம் பணிபுரியும் மற்றும் கடந்த காலத்தில் EPF-ல் சேர்க்கப்படாமல் விடப்பட்ட தகுதியான ஊழியர்களை அடையாளம் கண்டு, இந்தத் திட்டத்தின் கீழ் சேர்க்கலாம்.

ஊழியர்களைச் சேர்க்கும் நடைமுறை ஆன்லைன் மூலம் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஊழியருக்கும் UMANG செயலி மூலம் முக அங்கீகார முறையில் UAN உருவாக்க வேண்டும். பின்னர் ECR மூலம் EPF பங்களிப்பைச் செலுத்த வேண்டும்.

இந்தத் திட்டத்தின் மூலம் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் காப்பீடு போன்ற சமூகப் பாதுகாப்புப் பலன்கள் கிடைக்கும்.

எனவே, நிறுவனங்கள் தங்களது ஊழியர் மற்றும் சம்பளப் பதிவுகளைச் சரிபார்த்து, EPF-ல் சேர்க்கப்படாமல் விடப்பட்ட தகுதியான ஊழியர்களைக் கண்டறிந்து, அக்டோபர் 31-க்குள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு EPFO கேட்டுக்கொண்டுள்ளது.

– தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

Related Posts