தமிழகத்திற்கு புதிய தொழில்துறை கொள்கையை கொண்டு வருவது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது தமிழக அரசு.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்களின் முக்கியப் பிரதிநிதிகளைச் சந்தித்து வருகிறார். தமிழகப் பொருளாதாரத்தை உயர்த்தவும், முதலீடுகளை அதிகரிக்கவும் தமிழக அரசு அவர்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளதாகத் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“இந்த நடைமுறைகள் குறித்து நாங்கள் கற்றுக்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் முதலீடுகளை உயர்த்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்” என விஜய் அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறினார்.
தமிழகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதே விஜய் தலைமையிலான தவெக அரசின் முதன்மை நோக்கமாக உள்ளது. தமிழகத்தில் திறமையான இளைஞர்கள் இருந்தும், பல உயர்கல்வி நிறுவனங்கள் இருந்தும், இதுவரை உயர்தர வேலைவாய்ப்புகளை அரசால் உருவாக்க முடியவில்லை என்பது குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை செய்து வருகிறாராம். மேலும் தொழில்துறை வளர்ச்சியை அதிகரிப்பதுடன், பாலினப் பாகுபாடற்ற வேலைவாய்ப்புச் சூழலை உருவாக்குவதிலும் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு கவனம் செலுத்தி வருவதாக அரசின் உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு, தனது செயல்திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(இக்கட்டுரை இண்டஸ்ட்ரியல் எகனாமிஸ்ட்டில் வெளியான அசல் கட்டுரையின் தமிழாக்கம். தமிழாக்கம்: கெளதம் ர)









