வணிகம்

இன்ஸ்டமார்ட் CEOவாக நந்திதா சின்ஹா நியமனம்!

இந்தியாவின் முன்னணி உணவு மற்றும் விரைவு வர்த்தக நிறுவனமான ஸ்விக்கி (Swiggy), தனது இன்ஸ்டாமார்ட் (Instamart) பிரிவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக(CEO) நந்திதா சின்ஹாவை நியமித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்த பொறுப்பை ஏற்கும் இவர், இதற்கு முன்னர் மின்த்ரா (Myntra) நிறுவனத்தின் CEO-வாக இருந்தார். இன்ஸ்டாமார்ட் CEOவாக முன்னர் வகித்த அமிதேஷ் குமார் ஜா, நிறுவனத்தை விட்டு வெளியேறி புதிய வாய்ப்புகளை நாட முடிவு செய்திருப்பதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நியமனம் குறித்து விளக்கமளித்துள்ள ஸ்விக்கி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீஹர்ஷா மஜெட்டி, ” இந்தியாவின் மிகச் சிறந்த நுகர்வோர் இணையத் துறை தலைவர்களில் ஒருவர் நந்திதா சின்ஹா. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அவரது அணுகுமுறையும், செயல்திறனும் இன்ஸ்டாமார்ட்டின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பெரும் பலமாக இருக்கும்” என்று தெரிவித்தார். மேலும், வெளியேறும் அமிதேஷ் குமார் ஜாவும், இன்ஸ்டாமார்ட்டின் வளர்ச்சிக்கு அளித்த பங்களிப்பை அவர் பாராட்டினார்.

இன்ஸ்டாமார்ட் CEOவாக புதிய பொறுப்பை ஏற்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள நந்திதா சின்ஹா, “இன்ஸ்டாமார்ட் உருவாக்கியுள்ள வலுவான வாடிக்கையாளர் மைய கலாச்சாரத்தையும், திறமையான குழுவையும் நான் எப்போதும் பாராட்டி வந்துள்ளேன். இந்தியர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய தளமாக இன்ஸ்டாமார்ட் வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சியின் அடுத்த அத்தியாயத்தை உருவாக்கும் பயணத்தில் குழுவினருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறேன்” என்று கூறினார்.

நந்திதா சின்ஹாவுக்கு சில்லறை விற்பனை, எஃப்எம்சிஜி (FMCG) மற்றும் இ-காமர்ஸ் துறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது. ஹிந்துஸ்தான் யூனிலீவர், பிரிட்டானியா, ப்ளிப்கார்ட், மின்த்ரா ஆகிய நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். மின்த்ராவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தபோது, அந்நிறுவனத்தின் சந்தைப் பங்கை உயர்த்தி, இந்தியாவின் மிகப்பெரிய ஃபேஷன் இ-காமர்ஸ் தளமாக வளர்ச்சியடைய முக்கிய பங்காற்றியவர்.

2020-ல் தொடங்கப்பட்ட இன்ஸ்டாமார்ட் தற்போது 131-க்கும் மேற்பட்ட நகரங்களில் சேவையளித்து வருகிறது. இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் க்விக் காமர்ஸ் சந்தையில் Blinkit, Zepto, Amazon, Flipkart Minutes போன்ற நிறுவனங்களுடன், ஸ்விக்கி கடுமையாக கடுமையாக போட்டியிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தலைமை மாற்றம் இன்ஸ்டாமார்ட்டின் அடுத்த கட்ட வளர்ச்சியையும், வாடிக்கையாளர் அனுபவத்தையும் மேலும் வலுப்படுத்தும் என ஸ்விக்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Related Posts