வணிகம்

கர்நாடகா SBI-யில் ரூ.21 கோடிக்கு மேல் தங்கம் மற்றும் பணம் திருட்டு…

கர்நாடகா மாநிலம், நேற்று 16/09/2025 மாலை 6:30 மணியளவில் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள சாத்சன் பகுதியில் இருக்கும் SBI கிளையில் நேற்று மாலை ஆயுதமேந்திய கும்பல் ஒன்று கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தக் கொள்ளையில் சுமார் ரூ.21.04 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரொக்கம் திருடப்பட்டுள்ளது.

முதலில், முகமூடி அணிந்த ஒரு மர்ம நபர், வாடிக்கையாளர் போல வங்கிக்குள் நுழைந்துள்ளார். அவர், ஒரு current account ஆரம்பிப்பதற்கான படிவத்துடன் வந்துள்ளார். படிவத்தைச் சரிசெய்யும்படி வங்கி ஊழியர் கூறியதும், அந்த நபர் திடீரென துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் மிரட்டியுள்ளார். சிறிது நேரத்தில், முகமூடி அணிந்திருந்த மேலும் இரண்டு கூட்டாளிகள் அவருடன் இணைந்து கொண்டனர். மூவரும் சேர்ந்து, அங்கிருந்த ஊழியர்களையும் சில வாடிக்கையாளர்களையும் பிளாஸ்டிக் டேக் கொண்டு கட்டிப் போட்டுள்ளனர். பின்னர், வங்கியில் பணம் வைக்கப்பட்டு இருந்த லாக்கர்களையும், நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கர்களையும் திறக்கச் சொல்லி மிரட்டினர்.

கொள்ளையர்கள், வங்கியின் லாக்கர்களில் இருந்து ரூ.1.04 கோடி ரொக்கத்தையும், சுமார் 20 கிலோ எடையுள்ள தங்க நகைகளையும் அள்ளிச் சென்றனர். கொள்ளையடிக்கப்பட்ட மொத்த பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.21.04 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்திற்குப் பிறகு, கொள்ளையர்கள் போலி பதிவு எண் கொண்ட Suzuki EVA காரில் தப்பிச் சென்றனர். கொள்ளையர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்தர்பூர் பகுதியை நோக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது தப்பிச் செல்லும் வழியில், சோலாப்பூர் மாவட்டத்தின் ஹுல்ஜந்தி கிராமம் அருகே அவர்களின் வாகனம் ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதனால், உள்ளூர் மக்களுக்கும் கொள்ளையர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனே அங்கியிருந்து அவர்கள் கொள்ளையடித்த பொருட்களுடன் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து விஜயபுரா காவல்துறை உயர் அதிகாரி லட்சுமண் நிம்பர்கி தனிக்குழு அமைத்து கொள்ளையர்களை பிடிப்பதற்கான தீவிர வேட்டையில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா காவல்துறையினர் இணைந்து மாநில எல்லைப் பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Related Posts