சிறப்பு கட்டுரைகள்வணிகம்

SNN சங்கரலிங்க ஐயர் வாழ்க்கை வரலாற்று புத்தகம் வெளியீடு!

முன்னோடி தொழிலதிபரும், சன்மார் குழும (The Sanmar Group) கார்ப்பரேட் வாரியத்தின் தலைவர் என். குமாரின் தாத்தாவுமான மறைந்த SNN சங்கரலிங்க ஐயரின் வாழ்க்கைப் பயணத்தை பதிவு செய்யும் ச்ச்“Cementing Legacies: The Life of SNN Sankaralinga Iyer – A Pioneering Polymath” என்ற வாழ்க்கை வரலாற்று நூல் கடந்த சனிக்கிழமை (01.08.2026) வெளியிடப்பட்டது.

மூத்த பத்திரிகையாளர் கே. பாலகமார் இந்த வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியுள்ளார். இப்புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பும் அதே நேரத்தில் வெளியிடப்பட்டது; ‘தி சன்மார் குரூப்’ நிறுவனத்தின் முன்னாள் மூத்த அதிகாரியான வி. ரமேஷ் இதனைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ‘தி சன்மார் குரூப்’ நிறுவனத்தின் ஒரு பகுதியான ‘கலம்கிரியா’ (Kalamkriya) இந்நூலை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றிய டாக்டர் எச்.வி. ஹண்டே இப்புத்தகத்தை வெளியிட்டார். இந்நூல் வெளியீட்டு விழாவில் ‘நல்லி’ (Nalli) குழுமத்தைச் சேர்ந்த குப்புசாமி செட்டியும் கலந்துகொண்டார். இந்த நூல், சன்மார் குழுமம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

அசாத்திய தொழிலதிபர்

இவர் ஒரு அசாத்திய தொழிலதிபர். “ஒரு காலத்தில் வார்த்தைகளுக்கு மதிப்பு இருந்தது., வாக்குறுதிகள் அர்த்தமுள்ளவையாகக் கருதப்பட்டன., உறுதியான  நெறியுடன் தலைமைத்துவம் செயல்பட்டது. அப்படியான ஒரு காலகட்டத்தில், SNN வாழ்ந்தார்.” என்று, சன்மார் குழுமத்துடன் நீண்டகாலமாக இணைந்து செயல்பட்டு, அந்தக் குடும்பத்தின் நான்கு தலைமுறைகளை நேரில் கண்ட எஸ். பி. பிரபாகர் ராவ், நூலுக்கான தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தனது உரையில், மறைந்த எஸ்.என்.என். சங்கரலிங்க ஐயரை தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய “ஒரு கண்டறிவாளர்” (Discoverer) என்று டாக்டர் ஹெச்.வி. ஹண்டே பாராட்டினார். மேலும், சன்மார் குழுமத்திற்கும் டென்மார்க்கிற்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர்பையும் அவர் நினைவுகூர்ந்தார். 

Pic credit: Gowtham

சன்மார் குழுமத்தின் டென்மார்க் தொடர்பு இன்றளவும் தொடர்கிறது. பொதுநிர்வாகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து, ஆழமான பார்வை கொண்ட சட்டமன்ற உறுப்பினராகத் திகழ்ந்த முன்னாள் அமைச்சர், “வெளிநாட்டு முதலீட்டை மட்டுமே அதிகமாக நாடுவதை விட, உள்நாட்டு தொழில்முனைவோர்களை ஊக்குவித்து வளர்ப்பதே அவசியம்” என்று வலியுறுத்தினார். எப்போதும் பாரம்பரிய உடையணிந்து செயல்பட்ட எஸ்.என்.என். சங்கரலிங்க ஐயர் போன்றோரின் மிகப்பெரிய பங்களிப்பை நினைவுகூரும் வகையில் அவரது கருத்து அமைந்தது. 

“எந்தவொரு நிறுவனத்தின் ஆதரவோ, ஒரு வலிமையான தொழில்முனைவோர் பின்னணியோ இல்லாமல், அவர் ஒரு வங்கியாளராகத் தனது அனுபவத்தைப் பயன்படுத்தி, இந்தியாவின்  உணர்வோடு ஒத்துப்போகும் பொருட்களான உப்பு, ரப்பர், மை முதல் சிமெண்ட் மற்றும் இரசாயனங்கள் வரை உற்பத்தி செய்தார். அவரது பல குறிப்பிடத்தக்க சாதனைகளில், சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக ‘தி இந்தியா சிமெண்ட்ஸ்’ நிறுவனத்தை ஒரு பொதுப் பங்கு வெளியீட்டைத் தொடங்க வழிநடத்தியதும் ஒன்று. அந்த வெளியீட்டிற்கு தேவைக்கு அதிகமான பங்களிப்பு கிடைத்தது,” என ஒரு செய்திக்குறிப்பு தெரிவித்தது.

இந்தி மொழியின் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்த சங்கரலிங்க ஐயர், தனது முப்பதாவது வயதில் இந்தியை கற்றுக்கொண்டார். பின்னர், இந்தி கற்கும் மாணவர்களுக்காக ஒரு தொடக்கநிலை பாடநூலையும் எழுதியதுடன், இந்தி மொழியில் பல நாவல்களையும் இயற்றியுள்ளார்.

Pic credit: Gowtham

“எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை, தாத்தா எங்களுக்கு எப்போதுமே ஆதரவாகவும், நம்பிக்கைதரக்கூடிய தூணாகவும் இருந்தார். அவர் தனது உணர்வுகளை வெளிப்படையாக காட்டமாட்டார். ஆனால், இயல்பாகவே ஒரு ஆளுமை அவருக்கு இருந்தது. அது அவருடைய தன்னடக்கம் மற்றும் கண்ணியத்திலிருந்து உருவானது. தொழில் குறித்து தனது சக தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தும்போதும் சரி, பேரக்குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து நேரம் செலவிடும்போதும் சரி, அவர் அனைவரிடமும் ஒரே அளவிலான மரியாதையைப் பெற்றார். கடுமையான ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் தலைவராக இருந்தாலும், அதே நேரத்தில் குடும்பத்தின் மீது முழு அர்ப்பணிப்புடன் வாழ்ந்த எளிமையான மனிதராகவும் அவர் திகழ்ந்தார். இந்த இரு பண்புகளையும் அவரது வாழ்க்கை இயல்பாகவே ஒருங்கிணைத்திருந்தது,” என்று என். குமார் தெரிவித்தார்.

Pic credits: Gowtham

சங்கரலிங்க ஐயரின் கொள்ளுப் பேரனான விஜய் சங்கர் கூறும்போது, “நேர்மை, பணிவு அல்லது மனிதாபிமானம் ஆகியவற்றில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் தொழில் நிறுவனங்களை உருவாக்கியதே SNN சங்கரலிங்க ஐயரின் தனிச்சிறப்பு. ஒரு தொழில்முனைவோராகவும் நிறுவனங்களை உருவாக்கியவராகவும், இந்த வாழ்க்கை வரலாறு நூல் அவரை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், ஒரு குடும்பப் பற்றுள்ள மனிதராகவும் இருந்த அவரது  கொள்கைகள் இன்றும் நம்மை ஊக்கப்படுத்துவதையும் நமக்குக் காட்டுகிறது” என்றார்.

 

(இக்கட்டுரை இண்டஸ்ட்ரியல் எகனாமிஸ்ட்டில் வெளியான அசல் கட்டுரையின் தமிழாக்கம். தமிழாக்கம்: வீரச்செல்வி மதியழகன்.)

Click here for the original

Related Posts