சென்னை: அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட உலகின் முன்னணி காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம், சென்னையில் தனது உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre – GCC) அமைக்க தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் சுமார் 800 தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில், செப்டம்பர் 21 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வழிகாட்டி நிறுவனமான Guidance உடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவும் முதல் உலகளாவிய திறன் மையம் இதுவாகும். இந்தியாவில் ஸ்டார்பக்ஸின் சில்லறை வணிகக் கூட்டாளியான Tata Consumer Products நிறுவனத்திடமிருந்து தனித்து இந்த GCC செயல்படும்.
சென்னையில் உள்ள திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள், வலுவான உள்கட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு வழங்கும் முதலீட்டு ஊக்கங்கள் ஆகியவை GCC அமைப்பதற்கான முக்கிய காரணிகளாக இருப்பதாக ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்ப அலுவலர் ஆனந்த் வரதராஜன் தெரிவித்தார். மேலும், சென்னையில் உள்ள திறமையான பணியாளர்களின் குறைந்த பணியாளர் விலகல் விகிதம் (Less Attrition), புதிய தீர்வுகளை உருவாக்கவும், நிறுவனத்தின் வணிகத்தை விரிவுபடுத்தவும் உதவும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த GCC மூலம் தமிழ்நாட்டின் GCC சூழல் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயர் திறன் மற்றும் உயர் ஊதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் உலகளாவிய நிறுவனங்களை ஈர்க்கும் தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கும் இது கூடுதல் ஊக்கமளிக்கும்.
இந்த மையத்தின் மூலம் தமிழ்நாட்டின் திறமையான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுவதுடன், சென்னை உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் வணிகச் சேவை மையமாக வளர்வதற்கும் இது மேலும் வலுசேர்க்கும்.









