சிறப்பு கட்டுரைகள்

ஆடம்பரமல்ல… அத்தியாவசியம்! இரண்டாம் விமான நிலையம்..

சென்னை… 17ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவின் முக்கியமான வணிக நகரங்களில் ஒன்றாக இருந்துவருகிறது. இந்தியாவின் 30-40 சதவீத வாகன உதிரிபாகங்கள் சென்னை தொழில்நகரில் உற்பத்தியாகிறது. 1500க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னையில் இருக்கின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை தொழில்நகரமானது, தமிழ்நாட்டின் மொத்த GSDPயில் கிட்டத்தட்ட 31 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. 

நீர்வழி, வான்வழி, தரைவழி என அனைத்து வகையிலும் தொடர்புகொள்ளும் வகையில் அமைந்திருக்கும் முக்கிய நகரங்களில் ஒன்றாக சென்னை இருக்கிறது. சென்னை துறைமுகம், காமராஜர் (எண்ணூர்) துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம் என மூன்று துறைமுகங்கள் சென்னையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள, எந்த தொழில்நகரங்களிலும் இதுபோல மூன்று துறைமுகங்கள் இல்லை. அதுவே, தென்னிந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தின் நுழைவாயிலாக சென்னை இருக்க காரணமாக அமைந்துள்ளது. 

ஆனால், வான்வழி வர்த்தகத்தின் நிலை என்ன? மீனம்பாக்கம் விமானநிலையம் சென்னையின் வர்த்தக தேவையை பூர்த்தி செய்கிறதா? இன்னொரு விமான நிலையம் சென்னைக்கு ஏன் தேவை?  

இந்த கேள்விகளுக்கான விடைகள் ‘சூப்பர் சென்னை’ நடத்திய ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆலோசிக்கப்பட்டன.  பத்திரிகையாளர் ஜெயந்தி ரகுநாதன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில், ஜே. கிருஷ்ணன் (எஸ். நடேச ஐயர் லாஜிஸ்டிக்ஸ் எல்எல்பி மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர், மெட்ராஸ் வர்த்தக மற்றும் தொழில் சபை), வி.கே. கிரிஷ் பாண்டியன் (தலைவர், கிண்டி தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்), விஜய் கோபாலன் (முன்னாள் தலைமை நிதி அதிகாரி, ஏர்ஏசியா இந்தியா), கே. ஃபணீந்திர ரெட்டி (ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி)  ஆகியோர் தங்களுடைய கருத்துகளை கலந்துரையாடினர்.

தற்போதைய நிலை…

115 ஆண்டுகளுக்கும் மேலான விமானப் போக்குவரத்து வரலாற்றைக் கொண்ட சென்னை மீனம்பாக்கம் விமானநிலையம் இன்று சில நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்தியாவின் இதர முக்கிய தொழில்நகரங்களில் அமைந்திருக்கும் விமான நிலையங்களை ஒப்பிடுகையில் அளவிலும், விரிவாக்கத் திறனிலும், எதிர்கால வளர்ச்சியை தாங்கும் உள்கட்டமைப்பிலும் பின்தங்கி இருக்கிறது. 

நிலம்…

ஒரு நாளில் சராசரியாக 430 விமான போக்குவரத்து, 60,000 பயணிகள், சுமார் 1000 டன் அளவிலான சரக்குகள் (cargo) ஆகியவற்றை சென்னை விமான நிலையம் காண்கிறது. வாகன உதிரிபாகங்கள், செல்போன், உணவு பொருட்கள், அலங்கார பொருட்கள் என இந்தியாவின் விமானச் சரக்கு போக்குவரத்தில் 4வது இடத்தில் சென்னை விமான நிலையம் இருக்கின்றது. ஆனால், பெங்களூரு, மும்பை, டெல்லி, ஹைதெராபாத்  ஆகிய நகரங்களை ஒப்பிடுகையில் சென்னை விமான நிலையம் இரண்டு மூன்று மடங்கு சிறியதாக இருக்கிறது.

முனையங்கள்… 

1300 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் சென்னை விமான நிலையத்தில் T1,T2,T3,T4 என நான்கு முனையங்கள் இருந்தாலும் அவற்றில் மூன்று (T1,T2,T4) மட்டுமே இயக்கத்தில் இருக்கின்றன. T3யின் இரண்டாம் கட்ட கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே இருக்கும் விமான நிலையத்தின் உட்புறத்திலேயே (Brownfield) விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், 2026 ஆம் ஆண்டு இயக்கத்திற்கு வருமென எதிர்பார்க்கப்பட்ட இந்த முனையத்தின் கட்டுமான பணிகள் சவால்களை எதிர்கொண்டுவருகிறது. இந்திய வானூர்தி நிலைய ஆணையத்தின் (AAI) சமீபத்திய தகவலின்படி இந்த முனையம் 2027ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

ஓடுதளங்கள்…

முதன்மை ஓடுதளம்  (Primary runway), இரண்டாம் ஓடுதளம் (Secondary runway) என இரண்டு ஓடுதளங்கள் இருந்தாலும், அவை ஒன்றை ஒன்று குறுக்காக சந்திக்கின்றன (Intersecting each other).  இதனால் பாதுகாப்பு விதிமுறைகளின் அடிப்படையில், இரண்டு ஓடுதளங்களில் ஒரே நேரத்தில் சுயாதீனமாக விமானங்களை இயக்க முடியாது. எனவே கூடுதல் எண்ணிக்கையில் விமானங்களை இயக்குவதில் சிக்கல் நிலவுகிறது. மேலும், பரபரப்பான நேரங்களில் (peak hours) சரக்கு விமானங்களின் காத்திருப்பு நேரமும் அதிகமாக இருக்கிறது.  

 ICAO Code F தரம்… 

பெரிய ரக விமானங்களான  Airbus A380, Boeing 747-8 Freighter போன்ற விமானங்கள் இயக்கப்படுவதற்கான ICAO Code F தரத்தில் சென்னை விமான நிலையம் செயல்படவில்லை. ஆனால், மற்ற தொழில் நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதெராபாத் விமான நிலையங்கள் ICAO Code F தரத்தில் இருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.  

இயற்கை இடர்…

அடையாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இரண்டாவது ஓடுதளத்தில், அதீத கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில் விமானத்தை தரையிறக்குவதில் சிரமங்கள் இருக்கின்றன. கடந்த 2015 வெள்ளம் மற்றும் 2023 மிகக் கனமழையின் போது விமான நிலைய செயல்பாடுகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன. அந்த சூழல், ஒரே விமான நிலையத்தை மட்டுமே சார்ந்திருப்பதன் அபாயத்தை காட்டியது. 

விவரிவாக்க சிக்கல்

விமான நிலையத்தைச் சுற்றி அடர்த்தியான நகர்ப்புற வளர்ச்சி, ராணுவ பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றின் காரணத்தால் புதிய ஓடுதளங்கள் (Runways), விமான நகர்வுப் பாதைகள் (Taxiways), விமானங்கள் நிறுத்திவைக்கப்படும் இடங்கள் (Aprons) மற்றும் விமான நிறுத்து நிலைகள் (Aircraft Stands) போன்றவற்றை விரிவுபடுத்துவதற்கான நிலவசதி மிகவும் குறைவாக இருக்கிறது.

நடைமுறைகள்… 

சென்னை சர்வதேச விமான நிலையம்  நவீனமயமாக்கப்பட்டிருந்தாலும், சில நேரங்களில் குடியேற்றச் சோதனையில் (Immigration) நெரிசல்,  பயணிகளின் பொருட்களை பெறுவதில் தாமதம், டாக்சி நிறுத்துமிடங்களை அடைய நீண்ட தூரம் நடக்க வேண்டிய நிலை போன்ற சவால்கள் காணப்படுகின்றன. 

MICE கட்டமைப்பு…

உற்பத்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முத்திரை பதித்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME), புதிய தொழில் நிறுவனங்கள் (Startups) ஆகியவற்றின் முக்கிய மையமாக சென்னை திகழ்கிறது. இருப்பினும், சென்னையின் போட்டி நகரங்களாக விளங்கும் மும்பை மற்றும் பெங்களூருவுடன் ஒப்பிடும்போது, விமான நிலையத்தை மையமாகக் கொண்ட MICE (Meetings, Incentives, Conferences and Exhibitions)  கட்டமைப்பு, உலகத் தரத்திலான மாநாட்டு வசதிகள் மற்றும் ஒருங்கிணைந்த வணிகச் சூழல் இன்னும் முழு திறனை எட்டவில்லை. 

கொள்கை பரிந்துரைகள்…

எதிர்கால தேவைகளை கருதி திட்டமிடல்…

சென்னையின் தற்போதைய விமான நிலையம் சுமார் 1300 ஏக்கரில் இருக்கும் நிலையில், அதன் விரிவாக்க பணிகளை மேற்கொள்வதில் பல சவால்கள் இருக்கின்றன. அதை கருத்தில் கொண்டு, புதிதாக ஒரு விமான நிலையம் அமைக்கும்பொழுது, அடுத்த 30 – 40 ஆண்டுகளுக்கான பயணிகள், சரக்கு மற்றும் தொழில்துறை வளர்ச்சியை தாங்கக்கூடிய வகையில், தேவைக்கேற்ப விரிவாக்கம் செய்ய போதுமான நிலப்பரப்புடன் திட்டமிடல் அவசியமாகிறது.

ஓடுதள வடிவமைப்பில் மாற்றம்…

தற்போதைய விமான நிலையத்தில், ஒரு ஓடுதளத்திற்கு குறுக்கில் மற்றொரு ஓடுதளம் அமைந்திருப்பதால் ஏற்படும் சிக்கல்களை கவனத்தில் கொண்டு, புதிய விமான நிலையத்தில், இணையான (Parallel) ஓடுதளங்கள் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஒரே நேரத்தில் சுயாதீனமான விமான இயக்கங்களை மேற்கொள்ள முடியும். மேலும், விமானங்களின் காத்திருப்பு நேரம் குறையும்; விமான போக்குவரத்து திறன் அதிகரிக்கும். பெங்களூரு, டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களின் விமான நிலையங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணையான ஓடுதளங்கள் அமைக்கப்பட்டு திறம்பட இயங்கிவருகிறன்றன. 

மேலும், விரிவான விமான நகர்வுப் பாதைகள் (Taxiways), விமான நிறுத்துமிடங்கள் (Aprons) மற்றும் விமான நிறுத்து நிலைகள் (Aircraft Stands) அமைக்கப்பட வேண்டும்.

 காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம்  

அதீத கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் பிற இயற்கை பேரிடர்களால் விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்படாத வகையில், புதிய விமான நிலையம்  வடிவமைக்கப்பட வேண்டும். மேலும், குறைந்த பார்வைத்திறன் (Low Visibility) நிலவினாலும் விமானங்களை பாதுகாப்பாக இயக்குவதற்கு CAT III Instrument Landing System (ILS) உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். 

ICAO Code F தரத்தில் விமான நிலையத்தை உருவாக்குதல்

புதிய விமான நிலையம் ICAO Code F தரத்தில் வடிவமைக்கப்படுவதன் மூலம், Airbus A380, Boeing 747-8 Freighter உள்ளிட்ட  பெரிய அளவிலான பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களை கையாள முடியும். மேலும், விரிவான விமான நகர்வுப் பாதைகள் (Taxiways), விமான நிறுத்துமிடங்கள் (Aprons) மற்றும் விமான நிறுத்து நிலைகள் (Aircraft Stands) அமைக்கப்பட வேண்டும்.

உலக தரத்திலான தொழில்நுட்பம் 

புதிய விமான நிலையத்தில் Airport Collaborative Decision Making (A-CDM), Air Traffic Flow Management (ATFM), CAT III Instrument Landing System (ILS), டிஜிட்டல் விமானப் போக்குவரத்து மேலாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட வேண்டும். 

மேலும், புதிய விமான நிலையத்தில் Digi Yatra உள்ளிட்ட தானியங்கி பயணிகள் செயலாக்கம், விரைவான குடியேற்றச் சோதனை (Immigration), சுங்க நடைமுறைகள் (Customs), பயண பொருட்களை கையாள நவீன அமைப்பு (Smart Baggage Handling)  ஆகியவை ஏற்படுத்தப்பட வேண்டும்.

இதன் மூலம், விமான நிலையத்தின் செயல்திறன்,  பயணிகளுக்கான சேவைத் தரம் ஆகியவை மேம்படும். மேலும், சிங்கப்பூர், துபாய் போன்ற உலகின் முன்னணி விமானப் போக்குவரத்து மையங்களின் தரத்திற்கு இணையான நவீன விமான நிலையமாக சென்னையை உருவாக்க முடியும்.

விமான சரக்குகளுக்கு (Cargo)  முக்கியத்துவம்

புதிதாக அமையவிருக்கும் விமான நிலையத்தில் தனித்துவமான சரக்கு மையம் (Cargo Village), குளிர்சங்கிலி (Cold Chain) வசதிகள், மருந்துப் பொருட்கள், மின்னணு சாதனங்கள், குறைக்கடத்திகள் (Semiconductors) மற்றும் அதிவேக சரக்கு போக்குவரத்திற்கான நவீன உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதார வளர்ச்சி வலுவடையும். 

பல்வகை போக்குவரத்து இணைப்பு

புதிதாக அமைக்கப்படும் விமான நிலையமானது, விரைவுச் சாலைகள், மெட்ரோ, புறநகர் ரயில் மற்றும் சரக்கு போக்குவரத்து வழித்தடங்கள் மூலம் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், கிண்டி, மறைமலைநகர் உள்ளிட்ட தொழில்துறை மண்டலங்களை இணைக்கும் வகையில் அமைய வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டின் தொழில் மற்றும் ஏற்றுமதி திறன் வலுப்பெறும். 

விமான நிலையத்தை மையமாக கொண்டு MICE கட்டமைப்புகள்

புதிய விமான நிலையத்தைச் சுற்றி மாநாட்டு மையங்கள், கண்காட்சி வளாகங்கள் உள்ளிட்ட MICE (Meetings, Incentives, Conferences and Exhibitions) கட்டமைப்புகள் உருவாக்கப்படவேண்டும். இதன் மூலம், சர்வதேச மாநாடுகள், தொழில்துறை கண்காட்சிகள் மற்றும் வணிக நிகழ்வுகளுக்கான முக்கிய மையமாக சென்னை அமையும். 

இரட்டை விமான நிலைய (Dual-Airport) கொள்கை

சென்னையின் எதிர்கால விமானப் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு, தற்போதைய மீனம்பாக்கம் விமான நிலையமும், புதிதாக அமைக்கப்படும் இரண்டாவது விமான நிலையமும் ஒன்றுக்கொன்று துணைபுரியும் வகையில் ‘இரட்டை விமான நிலைய’ (Dual-Airport) கொள்கையை  பின்பற்றலாம். உள்நாட்டு மற்றும் குறுகிய தூர சர்வதேச பயணிகள் சேவைகளை ஒரு விமான நிலையத்திலும், நீண்ட தூர சர்வதேச விமானங்கள், சரக்கு போக்குவரத்து, விமான பராமரிப்பு மையங்கள் (MRO), தளவாட (Logistics) வசதிகள் ஆகிய சேவைகளை மற்றொரு விமான நிலையத்திலும் வழங்கலாம். 

இந்த முறை, லண்டன்(Heathrow,Gatwick), டோக்கியோ (Haneda,Narita) போன்ற விமான நிலையங்களில் நடைமுறையில் இருக்கிறது. மும்பை மாநகரப் பகுதியில் தற்போதைய மும்பை விமான நிலையத்துடன் இணைந்து நவி மும்பை சர்வதேச விமான நிலையம் இதே அணுகுமுறையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த அணுகுமுறையின் மூலம், விமானப் போக்குவரத்து நெரிசலை குறைத்து, தரமான விமானப் போக்குவரத்து சேவைகளை சென்னை வழங்க முடியும்.

நிர்வாக கட்டமைப்பு மற்றும் செயல்பாடு

தேவையான இடங்களில் பொதுத்துறை–தனியார் கூட்டாண்மை (Public-Private Partnership – PPP) முறையைப் பயன்படுத்தி இரண்டாவது விமான நிலையத் திட்டத்தை விரைவில் செயல்படுத்தவேண்டும். 

அதேநேரத்தில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environmental Impact Assessment – EIA), சட்டப்பூர்வ அனுமதிகள் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் போன்ற நடைமுறைகள் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். நில உரிமையாளர்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் தொடக்க நிலையிலிருந்தே தொடர்ச்சியான ஆலோசனைகள் நடத்தப்படவேண்டும். மேலும், அரசியல் மாற்றங்கள் காரணமாக திட்டத்தின் முன்னேற்றம் பாதிப்படையாத வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்படவேண்டும். 

எதிர்காலப் பார்வை

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் என்பது ஆடம்பரம் அல்ல; அது தமிழ்நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கான அத்தியாவசிய உள்கட்டமைப்பாக இருக்கிறது. 

2036 ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை தமிழ்நாடு அடைய வேண்டுமானால், மாநிலத்தின் பொருளாதார அளவு தற்போதைய நிலையிலிருந்து பல மடங்கு உயர வேண்டும் என இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry – CII) வலியுறுத்தியுள்ளது. அந்த வளர்ச்சியை தாங்கும் வகையில், சென்னையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அவசியம் எனவும் CII கருத்து தெரிவித்துள்ளது.  

முதலீடுகளை ஈர்ப்பதிலும், ஏற்றுமதியை விரிவுபடுத்துவதிலும், உலகத் தரத்திலான விமான இணைப்பை வழங்குவதிலும் முன்னணி மாநிலங்களுடன் தமிழ்நாடு கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது. இந்த வேளையில், மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரைவில் விரிவாக்கம் செய்து, கூடுதலாக சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது. 

Related Posts