தொழில்நுட்பம்

டிஜிட்டல் மாற்றத்திற்காக Zoho-வுடன் ஒப்பந்தம் செய்த இந்திய ராணுவம்…

இந்தியாவின் JAI (Jointness, Atmanirbharta & Innovation) திட்டத்தின் கீழ் உள்நாட்டு டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுக்கும் நோக்கில், இந்திய ராணுவம் சோஹோ கார்ப்பரேஷனுடன் (Zoho Corporation) புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில், இந்திய ராணுவத்தின் தகவல் அமைப்புகள் இயக்குநர் ஜெனரல் (DGIS) லெப்டினன்ட் ஜெனரல் ஹர்ஷ் சிப்பர் மற்றும் சோஹோ கார்ப்பரேஷனின் பொறியியல் இயக்குநர் ராஜேந்திரன் தண்டபாணி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்வில் ராணுவத் தளபதி Upendra Dwivedi மற்றும் Sridhar Vembu ஆகியோர் கலந்து கொண்டதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் (ராணுவம்) கூடுதல் பொது தகவல் இயக்குநரகம் (ADGPI) எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.

இந்த கூட்டாண்மையின் மூலம் பயன்பாட்டு அடிப்படையிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை (R&D) ஊக்குவித்தல், பாதுகாப்பான மற்றும் நீடித்த டிஜிட்டல் தீர்வுகளை உருவாக்குதல், இந்திய ராணுவ வீரர்களின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துதல் ஆகியவை இலக்குகளாக உள்ளன.

இதன் மூலம் இந்திய ராணுவத்தை எதிர்காலத்திற்குத் தயாரான, டிஜிட்டல் திறன் கொண்ட படையாக மாற்றும் முயற்சி மேலும் வேகமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JAI (Jointness, Atmanirbharta & Innovation) திட்டம், ராணுவத்தின் அனைத்து திட்டமிடல் மற்றும் செயல்பாட்டு நிலைகளிலும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், தற்சார்பு திறனை மேம்படுத்துதல் மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Related Posts