சென்னை: அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், தனது முதல் Global Capability Centre (GCC)-ஐ தமிழ்நாட்டில் அமைக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது.
தமிழ்நாடு அரசு புதிதாக அறிவித்துள்ள OMR- GCC வழித்தடத்தில் அமைந்துள்ள DLF Downtown, தரமணி வளாகத்தில் இந்த GCC நிறுவப்படவுள்ளது. முதல் ஆண்டில் சுமார் 250 பேருக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் மையத்தை விரிவுபடுத்தும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது.
உலகளவில் முன்னணி சுகாதார மற்றும் மருந்தக சேவை நிறுவனமாக செயல்பட்டு வரும் வால்கிரீன்ஸ், மருந்தகச் சேவைகள், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் நுகர்வோர் சுகாதாரப் பொருட்கள் உள்ளிட்ட துறைகளில் செயல்பட்டு வருகிறது.
சென்னையில் அமைக்கப்படவுள்ள இந்த GCC, தொழில்நுட்பம் மற்றும் வணிகச் சேவைகளை மையமாகக் கொண்டு செயல்படும். இந்தியாவிலேயே வால்கிரீன்ஸ் நிறுவும் முதல் உலகளாவிய திறன் மையம் இதுவாகும்.
இந்த முதலீடு, GCC துறையில் உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் வணிகச் சேவை மையமாக வளர்ந்து வருவதற்கான மற்றொரு முன்னேற்றமாகவும் இது அமைகிறது.
தமிழ்நாட்டின் Tier-II மற்றும் Tier-III நகரங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்குமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
தொழில் துறை அமைச்சர் செல்வி எஸ். கீர்த்தனா, தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. தீபக் ஷேக்கப் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள், வால்கிரீன்ஸ் உலகளாவிய திறன் மையத்தின் தலைவர் திரு. உமாபதி விஸ்வநாதன் மற்றும் நிறுவனத்தின் இயக்குநர் திரு. மசூத் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.









