தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனத்தில் இந்திய வம்சாவளி தலைமை இயக்க அதிகாரி!

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை இயக்க அதிகாரியாக ( Chief Operating Officer) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சபிஹ் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உலகின் செல்போன் உற்பத்தியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் முன்னணியிலிருக்கிறது. செல்போன் மட்டுமின்றி அது சார்ந்த சாதனங்கள்,லாப்டாப், ஸ்மார்ட் வாட்ச் போன்றவை தயாரிப்பிலும் சிறந்து விளங்குகிறது.

தற்போது, தலைமை இயக்க அதிகாரியாக இருக்கும் வில்லியம்ஸ், இவ்வாண்டு இறுதியில் ஓய்வு பெறவிருப்பதால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சபிஹ் கான் புதிய தலைமை இயக்க அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இம்மாத இறுதியில் பொறுப்பேற்கவுள்ளார். இவர் 30 வருடங்களாக ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வடிவமைப்பு மற்றும் ஆப்பிள் வாட்ச் பிரிவு மட்டும் வில்லியம்ஸ்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றவை சபிஹ் கானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தில் 1995 ஆம் ஆண்டு இணைந்த சபிஹ் கான், அந்நிறுவனத்தின் துணைத் தலைவராக 2019 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். துணைத்தலைவராக அவரது பணி மிக முக்கியமானது என்று, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் பலமுறை பாராட்டியிருக்கிறார்.

ஆப்பிள் நிறுவனத்தின் பொருள் உற்பத்தியின் போது வெளியாகும் கார்பன் அளவை, புதிய தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி 60 சதவீதம் குறைத்ததில், சபிஹ் கான் முக்கிய பங்கு வகித்ததாக டிம் குக் கூறியுள்ளார்.

சபிஹ் கானின் இந்திய தொடர்பு

இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், 1966ல் உத்தரபிரதேசத்தின் மொராதாபாத்தில் பிறந்திருக்கிறார். அவருக்கு 10 வயது இருக்கும்போது, அவரது குடும்பம் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தது. பின்னர் சில ஆண்டுகள் கழித்து, அவர்கள் அமெரிக்காவிற்கு குடிப்பெயர்ந்தனர்.

Related Posts