நாளை மறுநாள் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், ஸ்மார்ட்போன் விலை உயருமா அல்லது குறையுமா என்ற கேள்வி நம்ம எல்லாலோர் மனதிலும் எழத் தொடங்கி இருக்கு. இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன் என்பது ஆடம்பரப் பொருளாக இல்லாமல், கடைகளில் பொருட்கள் வாங்க, படிக்க, வேலை செய்ய என அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. பெரும்பாலான செயல்களுக்கும் ஸ்மார்ட்போன்களையே நம்பி இருக்கிறோம்.
கடந்த ஆண்டு Micromax, Ai+ போன்ற பல இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டுகள் உலக சந்தையில் கவனம் பெறத் தொடங்கின. Made in India தயாரிப்புகளை மக்கள் அதிகம் வாங்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, Apple, Samsung போன்ற நிறுவனங்களும் இந்தியாவில் தங்களின் உற்பத்தி நிலையங்களை தொடங்கின.
இதில், பெரும்பாலான நிறுவனங்கள் நடுத்தர மக்களை இலக்காகக் கொண்டு நிலையான விலையில் மாடல்களை வழங்கி வந்தாலும், Apple, Samsung உள்ளிட்ட சில நிறுவனங்கள் கடந்த ஆண்டு இறுதியில் குறிப்பிட்ட மாடல்களின் விலைகளை உயர்த்தின.

இதுபோலவே, உலகம் முழுவதும் AI தொடர்பான தேவை அதிகரித்ததால், மெமரி சிப்கள் உள்ளிட்ட முக்கிய உதிரி பாகங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் ஸ்மார்ட்போன் உற்பத்தி செலவுகள் அதிகரித்தன. இந்த கூடுதல் செலவுகளை முழுமையாக நுகர்வோரிடம் மாற்றி வசூலித்தால், விற்பனை குறையும் என்பதால், பெரும்பாலான நிறுவனங்கள் உடனடியாக விலை உயர்வை அமல்படுத்தவில்லை.
இந்த சிக்கலை தீர்க்க, கேமரா பாகங்கள், பேட்டரிகள், சர்க்யூட் போர்டுகள் போன்ற முக்கிய கூறுகளை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் தற்போது உருவாகியுள்ளது. தற்போது பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகின்றன; ஆனால் முக்கிய பாகங்கள் இன்னும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகவே உள்ளன.
இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் மொபைல் உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வரி சலுகைகள் வழங்கப்பட்டால், உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து செலவுகளை குறைக்க முடியும். இதன் மூலம் ஸ்மார்ட்போன் விலைகள் உயராமல் தடுக்கப்படலாம்; எதிர்காலத்தில் விலைக் குறைப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
உலகளாவிய பொருளாதார அழுத்தங்களால் உடனடியாக பெரிய அளவிலான விலை குறைப்புகள் சாத்தியமில்லை என்றாலும், எதிர்கால ஸ்மார்ட்போன் விலை போக்குகளை தீர்மானிப்பதில் இந்த மத்திய பட்ஜெட் முக்கிய பங்கு வகிக்கும்.









