கோல் இந்தியாவின் முக்கிய துணை நிறுவனமான மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட், பொதுப்பங்கு (IPO) வெளியீட்டிற்கான DRHP-ஐ தாக்கல் செய்துள்ளது.
மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனம், கடந்த ஆண்டு 218 மில்லியன் டன்னுக்கும் அதிகமான நிலக்கரியை உற்பத்தி செய்து, இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் 22.40% பங்களித்துள்ளது. மேலும், மின் உற்பத்தி நிறுவனங்கள், எஃகு உற்பத்தியாளர்கள், சிமெண்ட் நிறுவனங்கள் மற்றும் பிற தொழில்துறை நுகர்வோருக்கு நிலக்கரியை வழங்கி வருகிறது.
இந்த IPO மூலம் 66.18 கோடி பங்குகள் ஆஃபர் ஃபார் சேலாக வெளியிடப்பட உள்ளன. இதன் மூலம் கிடைக்கும் பணம் அந்த நிறுவனத்திற்குச் செல்லாது; பங்குகளை விற்கும் பங்குதாரர்களுக்கே கிடைக்கும்.
எம்.சி.எல். நிறுவனத்தின் வருவாய், கடந்த ஆண்டின் ஜூன் காலாண்டில் ரூ.7,548.3 கோடியாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டின் அதே காலாண்டில் ரூ.8,033.7 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,448.3 கோடியாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டின் அதே காலாண்டில் 2% சரிந்து ரூ.2,398.7 கோடியாகப் பதிவாகியுள்ளது.









