இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள தரவு மையங்களின் (Data Centres) மொத்த திறன், 2030 மார்ச் மாதத்திற்குள் தற்போதைய அளவைவிட 5 மடங்கு அதிகரித்து சுமார் 7.5 ஜிகாவாட் (GW) ஆக உயரும் என கிரிசில் ரேட்டிங்ஸ் (Crisil Ratings) எதிர்பார்க்கிறது. அடுத்த நான்கு நிதியாண்டுகளில் ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் இதற்காக ஈர்க்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்த திறன் அதிகரிப்பிற்கு, ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு (GenAI) சார்ந்த கணினி பயன்பாடுகளுக்கான தேவை அதிகரிப்பதும், நிறுவனங்களின் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தரவுப் பயன்பாடு அதிகரிப்பதும் முக்கியக் காரணங்களாக இருக்கிறதென கிரிசில் குறிப்பிட்டுள்ளது.
ஹைப்பர்ஸ்கேலர் (Hyperscaler) நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் நிலையான வருவாய் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆனால், தரவு மையங்களின் விரிவாக்க வேகம் மற்றும் அவற்றை உருவாக்கும் நிறுவனங்களின் கடன் தரம் ஆகியவை, உரிய நேரத்தில் மின்சார இணைப்பு கிடைப்பது, ஒழுங்குமுறை அனுமதிகள் பெறுவது மற்றும் திட்டங்களை முறையாகச் செயல்படுத்துவது ஆகியவற்றைப் பொறுத்தே அந்த வாய்ப்புகள் அமையும் என தெரிவித்துள்ளது.
“இந்தியாவின் கட்டமைப்பு ரீதியான செலவுகள் குறைவாக இருப்பது, உலகளாவிய தரவு மைய முதலீடுகளுக்கான முக்கியமான இடமாக இந்தியாவை மாற்றுகிறது. ஆசிய-பசிபிக் பகுதியில் உள்ள பல போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது, நிலம், கட்டுமானம் மற்றும் தொழிலாளர் செலவுகள் இந்தியாவில் குறைவாக இருப்பதால், இங்கு தரவு மையங்களை உருவாக்குவதற்கான செலவு சுமார் 20 சதவீதம் குறைவாக இருக்கிறது.
மேலும், குறைந்த மின்சாரக் கட்டணம் போன்றவற்றை சேர்த்துப் பார்த்தல், மற்ற போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது, தரவு மையங்களுக்கான வாடகைக் கட்டணங்கள் 30 முதல் 35 சதவீதம் வரை குறைவாக இருக்கின்றன,” என கிரிசில் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஆனந்த் குல்கர்னி தெரிவித்துள்ளார்.
மேலும், “புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்தும் மிகப்பெரிய தரவு மைய வளாகங்களை இந்தியாவால் உருவாக்க முடியும். இது ஹைப்பர்ஸ்கேலர் நிறுவனங்களின் நிலைத்தன்மை இலக்குகளுடன் (sustainability goals) நன்கு பொருந்துவதால், உலகளாவிய தரவு மையச் சந்தையில் இந்தியாவின் போட்டித்தன்மையை மேலும் வலுப்படுத்துகிறது” என்றும் அவர் கூறினார்.
அதேநேரத்தில், முன்னெப்போதும் இல்லாத அளவிலான தரவு மையங்களின் வளர்ச்சி, மின்சார உள்கட்டமைப்பில் பெரும் நெருக்கடியை உருவாக்கி வருவதையும் கிரிசில் சுட்டிக்காட்டியுள்ளது.









