இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் (EV) விற்பனை 2026-27 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 5.98 லட்சத்தை எட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 82 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு இதே காலாண்டில் 7.8 சதவீதமாக இருந்த மின்சார இருசக்கர வாகனங்களின் சந்தைப் பங்கு, தற்போது 11.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், செப்டம்பர் 2026-ல் இதன் சந்தைப் பங்கு 11.6 சதவீதமாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தென்னிந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் பதிவுகள் 85 சதவீதமும், மத்திய பகுதிகளில் 79 சதவீதமும், நாட்டின் பிற பகுதிகளில் 82 சதவீதமும் அதிகரித்துள்ளன.
சமீபத்தில் பாஸ்டன் கன்சல்டிங் (BCG) வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் 43 சதவீத வாடிக்கையாளர்கள் புதிய இருசக்கர வாகனத்தைத் தேர்வு செய்யும்போது மின்சார வாகனத்தை விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், 2024-ஆம் ஆண்டிலிருந்து மின்சார இருசக்கர (EV) வாகனங்களின் விற்பனை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் மின்சார வாகனங்களின் பங்கு FY24-ல் 5.5 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 9.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி, 2026-27 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் மின்சார இருசக்கர வாகன விற்பனை 133 சதவீதம் அதிகரித்து 1,86,186 வாகனங்களாக உயர்ந்துள்ளது. கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனம் 80,009 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.
இதேபோல், இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஏத்தர் எனர்ஜியும் 2026-27 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 62 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், விற்பனை அளவு 42 சதவீதம் உயர்ந்து 93,211 வாகனங்களாக அதிகரித்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகன (EV) விற்பனையும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் சுமார் 82,000 வாகனங்களாக இருந்த விற்பனை, இந்தக் காலாண்டில் சுமார் 2 லட்சம் வாகனங்களாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான (EV) தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களின் கவனம் மின்சார வாகனங்கள பக்கம் திரும்புவதால் இந்திய மின்சார இருசக்கர வாகனச் சந்தை வரும் ஆண்டுகளில் மேலும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.









