வணிகம்

எலக்ட்ரிக் பைக் சந்தையில் அசத்தும் Ultraviolette நிறுவனம்!

இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை உயர்வு, அரசின் மானியங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆர்வம் உள்ளிட்ட காரணங்களால் எலக்ட்ரிக் வாகனங்களின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்கு மாறாக எலக்ட்ரிக் பைக்குகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த தொடங்கியது பெங்களூருவைச் சேர்ந்த Ultraviolette நிறுவனம்.

2016-ஆம் ஆண்டு நாராயண் சுப்பிரமணியம் மற்றும் நிராஜ் ராஜ்மோகன் ஆகியோர் இணைந்து Ultraviolette நிறுவனத்தைத் தொடங்கினர். சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு 2024-ஆம் ஆண்டு தங்களின் முதல் எலக்ட்ரிக் பைக்கை, சந்தையில் அறிமுகம் செய்தது அந்த நிறுவனம்.

Lingotto, TDK Ventures, Qualcomm Ventures, Zoho Corporation, TVS Motor மற்றும் Speciale Invest போன்ற பல முக்கிய நிறுவனங்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

இதுகுறித்து Ultraviolette நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப அதிகாரியான நிராஜ் ராஜ்மோகன் தெரிவித்தது,

“நகரங்களில் பெரும்பாலான மக்கள் ஸ்கூட்டர் அல்லது 150 சிசிக்கு மேல் உள்ள பைக்குகளை வாங்குவதை கவனித்தோம். இன்னொரு புறம் உயர்தர எலக்ட்ரிக் பைக்குகளின் தேவை அதிகமாக இருந்தது. அந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள விரும்பினோம். அதனால்தான் அந்தத் துறையைத் தேர்வு செய்தோம்.” என்றார்.

இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக்குகளின் ஆரம்ப விலை ரூ.2.49 லட்சமாகும். இதுவரை சுமார் 5,000 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதில் F77 மற்றும் X47 முக்கிய மாடல்களாக உள்ளன. 2025 ஆகஸ்டில் ஏற்றுமதியைத் தொடங்கிய இந்த நிறுவனம், 2025-26 நிதியாண்டில் தனது வருவாயில் 10 சதவீதம் ஏற்றுமதியின் மூலம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு அது ஐந்து மடங்கு அதிகரிக்கும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.

பெட்ரோல் விலை அதிகரித்து வருவதால், எலக்ட்ரிக் பைக்குகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் மட்டும் ஒரு மாதத்திற்கு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான 150 சிசிக்கு மேல் உள்ள பைக்குகள் விற்பனையாகின்றன. அந்த வாடிக்கையாளர்களையும் ஈர்க்க Ultraviolette திட்டமிட்டுள்ளது.

Ultraviolette தனது வாகனங்களுக்கு 40 நாடுகளில் தேவையான சான்றிதழ்களை பெற்றுள்ளதுடன் தற்போது 19 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் மேற்கு ஐரோப்பாவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது. விரைவில் லத்தீன் அமெரிக்கா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிலும் விற்பனையைத் தொடங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அடுத்த கட்ட திட்டம்

எலக்ட்ரிக் பைக்களுக்குப் பிறகு, தற்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையிலும் நுழைந்துள்ளது Ultraviolette நிறுவனம்.

பெங்களூருவில் உள்ள இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை ஆண்டுக்கு 30,000 வாகனங்கள் தயாரிக்கும் திறன் கொண்டுள்ளது. 2029-ஆம் நிதியாண்டுக்குள் ஆண்டுக்கு 5 லட்சம் வாகனங்கள் தயாரிக்கும் அளவிற்கு உற்பத்தித் திறனை அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பல மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய தொழிற்சாலைகளை அமைக்க இடங்களைத் தேடி வருகிறது.

எலக்ட்ரிக் பைக் சந்தையில் முக்கிய இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனமாக Ultraviolette வளர்ந்து வருகிறது. இந்திய சந்தையில் மட்டுமின்றி உலக அளவிலும் அதன் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

எலக்ட்ரிக் பைக்கள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அவற்றுக்கான வரவேற்பும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ராயல் என்ஃபீல்டின் Flying Flea C6, சென்னை நிறுவனமான ராப்டீ எனர்ஜி மற்றும் ரிவோல்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய எலக்ட்ரிக் பைக் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

இதுகுறித்து கிரிசில் ரேட்டிங்ஸ் (Crisil Ratings) நிறுவனத்தின் இயக்குநர் பூனம் உபாத்யாய் கூறுகையில், “எலக்ட்ரிக் பைக்களின் ஆரம்ப விலை ரூ.1.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை உள்ளது. இது பெட்ரோல் பைக்களை விட சற்று அதிகமாகத் தோன்றலாம். ஆனால், ஒரு கிலோமீட்டர் பயணிக்க எலக்ட்ரிக் பைக்களுக்கு ரூ.0.20–0.25 மட்டுமே செலவாகிறது. அதே நேரத்தில், பெட்ரோல் பைக்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.2.50–3.00 வரை செலவாகிறது. இதுமட்டுமின்றி, மின்சார வாகனங்களின் பராமரிப்பு செலவும் மிகவும் குறைவு. எனவே, நீண்ட கால அடிப்படையில் எலக்ட்ரிக் பைக் பயன்படுத்துவது செலவைக் கணிசமாகக் குறைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.3 கோடி பெட்ரோல் பைக்குகள் விற்பனையாகின்றன. அவற்றில் ஒரு சிறிய பகுதி மக்கள் எலக்ட்ரிக் பைக்களுக்கு மாறினால், இந்தத் துறை மிகப்பெரிய வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts