சிறப்பு கட்டுரைகள்

EV-யில் டெல்லியின் புதிய முயற்சி! மின்சார வாகன கொள்கை 2.0

மின் வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் டெல்லி அரசு புதிய மின் வாகனக் கொள்கையை அறிவித்துள்ளது. பொது சுகாதாரம், தொழில்துறை வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் இந்திய நகரங்களின் எதிர்கால வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்தக் கொள்கை உள்ளடக்கியுள்ளது.

பல ஆண்டுகளாகவே டெல்லியின் காற்று தரம் மோசமடைந்து வருகிறது. உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து முன்னணி இடங்களில் டெல்லி இடம்பெற்று வருகிறது. காற்றின் தரத்தை உயர்த்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், அவை வெற்றி தரவில்லை.

ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களின் விவசாய நிலங்களில் இருந்து எழும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை உள்ளிட்டவை காற்று மாசுக்குக் காரணமாகக் கூறப்பட்டாலும், டெல்லியில் காற்று மாசுபடுவதற்கு 23%-க்கும் அதிகமாக வாகனங்களே காரணமாக உள்ளன. காற்று மாசைக் குறைத்து மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் இந்த புதிய கொள்கையை டெல்லி அரசு அறிவித்துள்ளது.

ஆட்டோ ரிக்ஷாக்கள், சரக்கு விநியோக வாகனங்கள் உள்ளிட்ட அதிக தூரம் பயணிக்கும் வாகனங்களே நகர மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக உள்ளன. அவற்றை மின்சார வாகனங்களாக மாற்றுவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் பொருளாதாரத்திற்கும் ஒரே நேரத்தில் நன்மை கிடைக்கும். மேலும், மின்சார வாகனங்களின் இயக்கச் செலவு குறைவாக இருப்பதால் வணிக நிறுவனங்களுக்கும் இது லாபகரமாக அமையும்.

இந்தக் கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்த அடுத்த நான்கு ஆண்டுகளில் சுமார் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. அதேசமயம், அடுத்தாண்டு இறுதிக்குள் டெல்லியில் பதிவு செய்யப்படும் மொத்த புதிய வாகனங்களில் 95 சதவீதம் மின்சார வாகனங்களாக மாற்ற டெல்லி அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

எனினும், இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் பல சவால்கள் உள்ளன. சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, அவற்றை முறையாக பராமரித்து கண்காணிக்கவும் வேண்டும். அதிகளவில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு வரும்போது மின் தேவை அதிகரிக்கும். பயன்படுத்தப்பட்ட பேட்டரிகள் மற்றும் பழைய வாகனங்களை மறுசுழற்சி செய்வது, தொழிற்சாலைகள் அமைக்க போதுமான நிலத்தை ஒதுக்குவது, வாகனங்களைப் பழுதுபார்க்கும் தொழிலாளர்களுக்கு தேவையான பயிற்சி மற்றும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது போன்றவை முக்கிய சவால்களாக உள்ளன.

இந்தியாவில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு வருமா என்ற கேள்வி தற்போது இல்லை. மாறாக, அந்த மாற்றத்தை எவ்வளவு வேகமாகவும் செயல்படுத்த முடியும் என்பதே முக்கிய கேள்வியாக மாறியுள்ளது. அந்த வகையில், டெல்லியின் புதிய மின் வாகனக் கொள்கை நாட்டின் மற்ற நகரங்களுக்கும் முன்னுதாரணமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

எப்படிக் கலிபோர்னியாவின் பூஜ்ஜிய மாசு உமிழ்வு கொள்கைகள் உலக வாகனத் துறையின் மாற்றத்தை எற்படுத்தியதோ, அதேபோல் டெல்லியின் மின்சார வாகனக் கொள்கை 2.0 இந்தியாவின் போக்குவரத்து துறையில் புரட்சியை எற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

(This article is a translated version of the original article published in Industrial Economist. Translated by Gowtham Ramesh.)

original article: Link

Related Posts