வணிகம்

மீண்டு(ம்) வருகிறது ONIDA..!

நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டுகளில் மிகவும் பிரபலமான ஒன்றான ஒனிடா எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், இன்று சென்னையில் தனது ப்ரீமியம் தயாரிப்பான 100-அங்குல QD Mini LED டிவியை அறிமுகம் செய்தது.

மேலும், பிரீமியம் தயாரிப்புகள், புத்தாக்கம், மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் நிலையான வணிக வளர்ச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்ட தனது வளர்ச்சி பயணத்தின் அடுத்தகட்டமாக ‘ஒனிடா ரீவைர்டு’ என்ற திட்டம் குறித்து பகிர்ந்துகொண்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனரான குஞ்சன் ஸ்ரீவஸ்தவா, “ ஒனிடா ரீவைர்டு என்பது, எங்களது அடுத்தகட்ட வளர்ச்சியின் தொடக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக எலக்ட்ரானிக் சந்தையில் சரிவை சந்தித்து வந்த ஒனிடா, பல மடங்கு வளர்ச்சியை குறிவைத்து ‘ஒனிடா ரீவைர்டு’ திட்டத்தை கையில் எடுத்துள்ளது. பிரீமியம் தயாரிப்புகள், வலுவான ரீடெய்ல் வர்த்தகம் மற்றும் சேவைத் திறன்கள் மற்றும் மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவங்கள் ஆகிவற்றை நுகர்வோருக்கு வழங்குவோம்” என்றார்.

அடுத்த 2-3 ஆண்டுகளில், இந்தியாவில் 100 புதிய அவுட்லெட்களைத் தொடங்கி தனது சில்லறை வர்த்தகத்தை விரிவுபடுத்தவும், அடுத்த 12 மாதங்களில் 400-க்கும் மேற்பட்ட சேவை கூட்டாளர்களை உள்ளடக்கி வாடிக்கையாளர் சேவை அமைப்பை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

சென்னை போன்ற பெருநகரங்களை விட, இரண்டாம் மூன்றாம் நிலை நகரங்களில் ஒனிடாவுக்கான நுகர்வோர் அதிகம் இருப்பதாக ஸ்ரீவஸ்தவா கூறினார். இந்த நவீன யுகத்தில் நுகர்வோரின் தேவைகளுக்கு ஏற்றபடி, புதிய தொழில்நுட்பங்களுடன் ஒனிடா மீண்டு வருவதாக அவர் கூறினார்.

நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சந்தையில் 90களில் முன்னணியில் இருந்த ஒனிடா, பல சர்வதேச நிறுவனங்களின் வருகையால் சரிவை சந்தித்தது. இந்நிலையில், மொட்டைத்தலையில் கொம்பு வைத்திருந்த ‘டெவில்’ விளம்பரம் மூலம் தனது சாதனங்களை சந்தைப்படுத்திய ONIDA, இப்போது புதிய சந்தை யுக்தியுடன் மீண்டும் களமிறங்குவதாக ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

Related Posts