விவசாயிகளுக்கு மத்தியில் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் உருவாகி வருகின்றன. அதிக மா சாகுபடி, நெல் கொள்முதல், தற்போது பருத்தி உற்பத்தி ஆகியவை முக்கிய சிக்கைகள். இந்தியா முழுவதும் பருத்தி உற்பத்தி குறைந்துள்ள நிலையில், தேவை அதிகரித்ததால் வெளிநாடுகளில் இருந்து பருத்தி இறக்குமதி செய்யும் நிலை உருவாகியுள்ளது.
தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் பருத்தியின் தரம் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பருத்திக்கு ஏற்ற விலை கிடைக்கவில்லை. காலநிலை மாற்றம், பூச்சி தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் பருத்தியின் தரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால், தமிழக விவசாயிகள் பருத்தி சாகுபடியை செய்ய விருப்பம் கட்டுவதில்லை. இந்த நிலை தொடர்ந்தால், நாட்டின் பருத்தி உற்பத்தியில் கடும் பாதிப்பு எற்பட வாய்ப்புள்ளது.
இந்த சூழ்நிலையை சரிசெய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதிய பருத்தி ரகங்களை அறிமுகப்படுத்தும் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, கோவையில் மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பருத்தி உற்பத்தியை அதிகரிக்கும் செயல் திட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

விளைவாக, பூச்சி தாக்குதலை தாங்கும், பருவநிலைக்கு ஏற்ற, உயர் தர பருத்தி ரகங்களை உருவாக்குவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இதில், மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், செயலர் தட்சிணாமூர்த்தி, பருத்தி உற்பத்தி செய்யும் பிற மாநிலங்களின் அமைச்சர்கள், வேளாண் ஆராய்ச்சியாளர்கள், தொழில் நிறுவன பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் கோவை வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த கூட்டம் பருத்தி உற்பத்தியாளர்களுக்கு மிக முக்கியமானதாக இருப்பதால், இதில் நேரில் பங்கேற்க இயலாத விவசாயிகள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க மத்திய அரசு புதிய ஏற்பாடாக தொலைபேசி எண்ணை வழங்கியுள்ளது – 1800 180 1551 (கட்டணமில்லா எண்). இந்த எண்ணை அழைத்து விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள், கருத்துகள் மற்றும் சிக்கல்களை தெரிவிக்கலாம். அவை அலுவலர்களால் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








