வணிகம்

தமிழகத்திற்கு வரும் உலகத்தர முதலீடுகள்! 2,920 வேலைவாய்ப்புகள்

தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தித் திட்டம் மற்றும் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகத்தை அமைக்க, முதல்வர் விஜய் முன்னிலையில் உலகின் முன்னணி நிறுவனங்கள் தமிழக அரசுடன் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் தமிழ்நாட்டில் 2,920-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நந்தனத்தில் உள்ள வழிகாட்டி நிறுவனத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

உலகின் முக்கிய நிறுவனமான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த Chubb நிறுவனம் தனது உலகளாவிய திறன் மையத்தையும், ஜெர்மனியைச் சேர்ந்த Nordex நிறுவனம் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தையும் தமிழ்நாட்டில் முதன்முறையாக அமைக்க உள்ளது.

இதன்படி Chubb நிறுவனம் மூலம் 220 வேலைவாய்ப்புகளும்,

Nordex நிறுவனம் மூலம் 1,000 வேலைவாய்ப்புகளும் என மொத்தம் 1,220 உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான University of Western Australia, வேளச்சேரியில் சுமார் ரூ.125 கோடி முதலீட்டில் தனது வளாகத்தை அமைக்க உள்ளது. இது தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகமாகும். இதன் மூலம் 200-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், SIPCOT பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில், ரூ.300 கோடி முதலீட்டில் தென் கொரியாவைச் சேர்ந்த வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனமான MotiveLink, புதிய உற்பத்தி நிலையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இதுகுறித்து பேசிய தமிழக முதல்வர் விஜய், “இந்த முதலீடுகள் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதோடு, உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உயர்கல்வி மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளுக்கான உலகளாவிய மையமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்தும். மேலும், இந்நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும்,” என தெரிவித்தார்.

இதில் தொழில்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், வழிகாட்டி நிறுவன அதிகாரிகள், Chubb, Nordex, University of Western Australia, MotiveLink நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

 

 

Related Posts