தொழில்நுட்பம்

1000 உயிர்களை காப்பற்றிய மெட்டா!

உத்தரபிரதேசத்தில் மெட்டா   கொடுத்த தகவலால் தற்கொலைக்கு முயன்ற 20 வயது பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

தற்கொலைகளை தடுப்பதற்காக உத்தர பிரதேச காவல்துறையினரும் மெட்டா நிறுவனமும் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டன. அதன்படி இதுவரை ஆயிரக்கணக்கான தற்கொலைகளை மெட்டா கொடுத்த தகவலின் அடிப்படையில் அம்மாநில காவல்துறை தடுத்த நிறுத்தி இருக்கிறது.

இந்த வகையில், இப்போது ஒரு பெண்ணை மெட்டாவின் உதவியுடன் காவல்துறை காப்பாற்றியுள்ளது.கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி, பூச்சிக்கொல்லி மாத்திரைகளின் புகைப்படங்களை பகிர்ந்து ஒரு விரக்தியான தலைப்புடன் instagramல் ஒரு பெண் பதிவிட்டிருந்தார். உடனடியாக அந்த பதிவை மெட்டா நிறுவனம் உத்தரபிரதேச காவல் நிலையத்திற்கு தகவலாக கொடுத்தது. தகவல் கிடைத்த 16 நிமிடங்களில் காவல்துறையினர் அந்தப் பெண் இருந்த இடத்திற்கு நேரில் சென்றனர். அங்கு சென்று பார்த்த போது அந்த பெண் வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் கிடந்திருக்கிறார். உடனடியாக அந்த பெண்ணை மீட்டு காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அந்த பெண் நலமாக உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக்கு முயன்ற அந்த இருபது வயது பெண் BA பட்டதாரி என்றும், instagramல் தன்னை காதலித்து ஒருவர் ஏமாற்றி விட்ட காரணத்தால் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாகவும் விசாரணையில் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அம்மாநில காவல்துறை டிஜிபி ராஜீவ் கிருஷ்ணா வெளியிட்ட அறிக்கையில், “மதியம் 12.45 மணியளவில் அந்தப் பெண் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அடுத்த நொடியில் மெட்டா காவல் துறையினருக்கு மின்னஞ்சல் அனுப்பியது. மின்னஞ்சலில் அந்தப் பெண்ணின் பதிவும் அவருடைய தொலைபேசி எண்ணையும் மெட்டா பகிர்ந்து கொண்டது. மெட்டாவிடமிருந்து தகவல் கிடைத்த 16 நிமிடங்களில் அந்தப் பெண் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது அவர் நலமாக உள்ளார். மெட்டாவின் உதவியால் ஜனவரி 1,2023 முதல் ஆகஸ்ட் 25, 2025 வரை 1,315 உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதுபோல் தற்கொலைகளை தடுக்க இந்திய அளவில், உத்தர பிரதேச மாநில காவல்துறையும், ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா மாவட்ட காவல்துறையும் மட்டுமே மெட்டா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு இருக்கின்றன.

இந்த செய்தி குறித்து தமிழ்நாடு காவல்துறையின் பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனை தொடர்புகொண்டு, “தற்கொலைகளை தடுக்க, உத்திரபிரதேச அரசை போல தமிழ்நாடு காவல்துறையும் ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறதா?” எனக் கேட்டோம். “நான் மீட்டிங்கில இருக்கேன். ஒரு அதிகாரி உங்களுக்கு பேசுவாங்க” என்றார்.

சிறிது நேரம் கழித்து நம்மை, டிஜிபி அலுவலகத்திலிருந்து SP மீனா தொடர்புகொண்டார். செய்தி குறித்த முழு விவரங்களையும் கேட்டறிந்த மீனா, “ஏற்கனவே சமூக உடகங்கள் முழுவதும் கண்காணிக்கப்படுகின்றன. அதன் மூலம் சிலர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஆனால் குறிப்பிட்ட நிறுவனங்களுடன் எவ்வித ஒப்பந்தங்களும் இல்லை. நீங்கள் கூறியது சிறப்பான தகவல். இது குறித்து அலோசனை நடத்தி முடிவெடுப்போம். நன்றி” என்றார்.

Related Posts