தொழில்நுட்பம்

LFP பேட்டரிகள் என்றால் என்ன?

சமீபத்தில் ஓலா நிறுவனம் தனது உள்நாட்டு தயாரிப்பான LFP வகை பேட்டரிகளுக்கு BIS தர சான்றிதழ் பெற்றது. வெப்பத் தாக்குதல், திடீர் மின் கோளாறு (short circuit), மோதல், அதிர்வு உள்ளிட்ட பல சோதனைகளில், ஓலாவின் 46100 LFP பேட்டரி செல் BIS தர சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த வகை LFP பேட்டரி முழுமையாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவது இதன் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

ஏன் LFP பேட்டரி?

உலகம் முழுவதும் எரிசக்தி தேவை அதிகரித்து வரும் நிலையில், மின்சார பேட்டரிகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், LFP (Lithium Iron Phosphate), NMC (Lithium Nickel Manganese Cobalt Oxide), NCA (Lithium Nickel Cobalt Aluminum Oxide), LCO (Lithium Cobalt Oxide), LTO (Lithium Titanate), Sodium-ion (Sodium-ion Battery) போன்ற வகை பேட்டரிகள் வாகனங்களின் திறனுக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகின்றன.

NMC மற்றும் NCA பேட்டரிகளை விடச் குறைவான ஆற்றல் அடர்த்தியைக் கொண்டிருந்தாலும், LFP வகை பேட்டரிகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. சிறந்த பாதுகாப்பு, நீண்ட ஆயுட்காலம், குறைந்த விலை மற்றும் மேம்பட்ட வெப்ப நிலைத்தன்மை அதற்கு மிக முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. இதனால், இருசக்கர வாகனங்கள் போன்ற வெகுஜன வாகனங்களில் LFP வகை பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன.

LFP வகை பேட்டரிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிசில் ரேட்டிங்ஸ் இயக்குநர் ஆனந்த் குல்கர்னி, “மின்சார வாகனத்தின் மொத்தச் செலவில் 40 முதல் 45 சதவீதம் வரை பேட்டரியின் பங்களிப்பு உள்ளது; இதில் பேட்டரி தொகுப்பின் (battery pack) செலவில் 20 முதல் 30 சதவீதம் வரை கேத்தோடு (cathode) பகுதிக்கான செலவாக இருக்கிறது. LFP கேத்தோடுகள் விலை குறைவானவை என்பதால், சிக்கனமான மின்சார வாகன பேட்டரிகளுக்கு LFP பேட்டரிகளே சிறந்த தேர்வாக மாறியுள்ளன” என தெரிவித்துள்ளார்.

ஓலாவின் LFP பேட்டரிகள் ஏன் கவனம் பெறுகின்றன?

அமரா ராஜா (Amara Raja), எக்ஸைட் எனர்ஜி சொல்யூஷன்ஸ் (Exide Energy Solutions) மற்றும் ரிலையன்ஸ் (Reliance) போன்ற நிறுவனங்கள், பேட்டரி உற்பத்திக்காக பில்லியன் கணக்கில் செலவிட்டு வருகின்றன; தொழிநுட்ப தேவைகளுக்காக கோஷன் ஹை-டெக் (Gotion High-Tech), ஸ்வோல்ட் (SVOLT), ஃபராடியன் (Faradion) மற்றும் லித்தியம் வெர்க்ஸ் (Lithium Werks) போன்ற நிறுவங்களை அவை சார்ந்துள்ளன.

ஆனால், BIS சான்றளிக்கப்பட்ட ஓலாவின் 46100 LFP பேட்டரி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்திய தொழில்நுட்பத்தில் உருவாகியிருப்பது கூடுதல் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. மேலும், இந்த வகை பேட்டரிகள் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஓலா ஃபியூச்சர் ஃபேக்டரியில் (Ola Future Factory) உற்பத்தி செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts