தொழில்நுட்பம்

பாதுகாப்பு குறைபாடுகளைத் தவிர்க்க ‘ஜீரோ வல்னரபிலிட்டி’ ஏஐ சேவை: ஹெக்ஸாவேர்

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ், ஐடி நிறுவனங்களில் அதிகரித்து வரும் பாதுகாப்புக் குறைபாடுகளை நிர்வகித்து, அவற்றைச் சரிசெய்ய உதவும் வகையில் ‘ஜீரோ வல்னரபிலிட்டி’ என்ற புதிய ஏஐ பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள ஹெக்ஸாவேர் வளாகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அந்நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீகிருஷ்ணா கூறியதாவது:

“சுமார் 900 பில்லியன் டாலர் மதிப்புள்ள மென்பொருள் சேவை (SaaS) சந்தையில், புதுப்புது ஏஐ தொழில்நுட்ப மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதில் நிறுவனங்கள் பெரும்பாலும் லோ-கோட், நோ-கோட் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் சேவைகளை நோக்கி நகர்ந்து வருகின்றன.

செயற்கை நுண்ணறிவு என்பது வெறும் கோடிங், ஆட்டோமேஷன் போன்றவற்றுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் அல்ல. நிறுவனங்களில் உள்ள சிக்கல்களைக் குறைத்து, அவை வேகமாகச் செயல்பட உதவுவதில்தான் உள்ளது. இதற்காக ஹெக்ஸாவேர் அறிமுகப்படுத்துவது தான் “Zero Friction Enterprise”” என்றார்.

“இதன் முக்கிய அம்சங்களில் ஒன்றாக ஜீரோ வல்னரபிலிட்டி சேவை உள்ளது. தனிப்பட்ட பயன்பாடுகள், SaaS மற்றும் PaaS சூழல்கள், மூன்றாம் தரப்பு மென்பொருள்கள் உள்ளிட்ட அனைத்து வகையான தகவல் தொழில்நுட்ப அமைப்புகளிலும் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளை கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்ய இந்தச் சேவை உதவும்.

நிறுவனங்களில் உள்ள பாதுகாப்புச் சிக்கல்கள், பழைய தொழில்நுட்பங்கள், பணிகளை முடிப்பதில் ஏற்படும் தாமதங்கள், மென்பொருள் குறைபாடுகள் மற்றும் பல்வேறு ஐடி பிரச்சினைகளை ஒரே அணுகுமுறையின் மூலம் குறைப்பதே Zero Friction Enterprise-ன் முக்கிய நோக்கமாகும்.

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் தேவையற்ற செயல்முறைகள் மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்களைக் குறைப்பதன் மூலம், அந்த நிறுவனம் வேகமாக முன்னேற முடியும் என்றும்” அவர் தெரிவித்தார்.

Related Posts