கண்ணாடி போட்டா ஸ்டைலா மாஸா இருந்தா மட்டும் போதுமா? கொஞ்சம் ஸ்மார்டாவும் இருக்கணும்ல! அதற்காக தான் மெட்டா நிறுவனம் இந்த கண்ணாடிய அறிமுகம் செய்திருக்கங்க.
சமீபத்தில் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய Ray-Ban ஸ்மார்ட் கண்ணாடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனம் பிரபல கண்ணாடி நிறுவமான Oakley-யுடன் இணைந்து, புதிய AI கண்ணாடியான Oakley மெட்டா HSTN-ஐ அறிமுகம் செய்துள்ளது.

விளையாட்டு வீரர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த AI கண்ணாடிகளில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இதில் 12MP கேமரா (3K Ultra HD), மைக்ரோஃபோன், ஸ்பீக்கர் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு அம்சங்கள் உள்ளன. அதிவேக சார்ஜிங் வசதி கொண்டுள்ளதால் 40 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்யலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணிநேரம் வரை பயன்படுத்த முடியும். மேலும் இதில் வீடியோ பதிவு செய்யலாம், நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நேரடி பதில்கள் அளிக்கும் மெட்டா AI-யும் பொருத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி கால்கள், மெசேஜ், இசை உள்ளிட்ட அம்சங்களும் இவற்றை கட்டுப்படுத்த பட்டனும் இடம்பெற்றுள்ளன.

இந்த கண்ணாடியின் ஆரம்ப விலை ரூ.34,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. IPX4 Waterproof வசதி கொண்ட இதை மழையிலும், வியர்வை படும்போதும் கவலையின்றி பயன்படுத்தலாம். உங்கள் கண்ணின் பவருக்கு ஏற்ப பல்வேறு ஃபிரேம்கள், லென்ஸ் வகைகள் பொருத்தி, மருத்துவக் கண்ணாடியாகவும் இதனை பயன்படுத்த முடியும்.

ஜூலை 11ஆம் தேதி முதல் இந்த கண்ணாடிக்கு முன்பதிவு செய்யலாம். முதலில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் விற்பனை தொடங்க உள்ளது. அதன் பிறகு, இந்தியா, மெக்சிகோ மற்றும் அரபு எமிரேட்ஸ் போன்ற பகுதிகளில் இந்த ஆண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.









