தொழில்நுட்பம்

மாற்றத்தை நோக்கி திருப்பூர்…

மனிதனின் நாகரீக வளர்ச்சியில்,  கால மாற்றத்தின்  முக்கிய சாட்சியாக ஆடைகள் இருக்கின்றன. அவற்றின் தேவை அதிகரித்து வரும் அதேவேளையில், அதன் உற்பத்தியின்போது உருவாகும் கழிவுகளால் ஏற்படும் சிக்கல்களும் அதிகரித்து வருகின்றன. நீர்நிலைகள், நிலத்தடி நீர், நிலம், காற்று என இயற்கையின் அத்தனை அங்கங்களும் மாசடைந்து பாதிப்பிற்கு உள்ளாகின்றன. ஆடை/ ஜவுளி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் இந்தோனேசியா, வியட்நாம், பங்களாதேஷ், சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த சவாலை சந்திக்கின்றன. 

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP – United Nations Environment Programme) வெளியிட்ட தரவுகளின் படி, ஆண்டுதோறும் சுமார் 215 டிரில்லியன் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஜவுளி உற்பத்திச் செயல்முறையில் சுமார் 15,000 வகையான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இவற்றில் சில ரசாயனங்கள் சுற்றுச்சூழலில் பல தசாப்தங்களாகத் தங்கியிருந்து, நீர், மண் மற்றும் உயிரினங்களைப்  கடுமையாக பதிப்பவையாகவும் இருக்கின்றன என கூறப்பட்டுள்ளது.  விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்பட்ட பல நதிகள், நச்சுத்தன்மை கொண்டவையாக மாறியுள்ளன. அதற்கு சிறந்த உதாரணம், இந்தோனேசியாவின் சிடாரும் ஆறு. 2,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் இருந்து வந்த கழிவுகளால், அந்த ஆற்றில் வாழ்ந்த 60 சதவீத உயிரினங்கள் அழிந்தன. இப்போது அந்த ஆற்றை பாதுகாக்கும் முயற்சி நடந்து வருகிறது. 

இந்த ஆற்றிற்கு ஏற்பட்ட பாதிப்பை விட பல மடங்கு பாதிப்பு, தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் ஓடும் நொய்யல் ஆற்றிற்கு ஏற்பட்டது. 700க்கும் மேற்பட்ட சாயப்பட்டறை கழிவுகளால், 1999-2000 ஆம் ஆண்டுகளில், நொய்யல் ஆறு கருப்பு நிற சாக்கடையாக மாறியது. “இறந்த ஆறு” என்று அறிவிக்கப்பட்டது. அந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த ஒரத்துப்பாளையம் அணையும், ரசாயனக் கழிவுகள் தேங்கும் இடமாக மாறியது. அணையின் நீரில் மொத்தக் கரைந்த திடப்பொருட்களின் (Total Dissolved Solids – TDS) அளவு லிட்டருக்கு 7,900 மில்லிகிராம் வரை உயர்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அணையின் அடிமண்ணில் குரோமியம், தாமிரம், துத்தநாகம், ஈயம் போன்ற கன உலோகங்கள் அதிக அளவில் படிந்திருந்தன. இதன் தாக்கம் ஆற்றுடன் நின்றுவிடாமல், நிலத்தடி நீர் மற்றும் விவசாய நிலங்களுக்கும் பரவியது. இதன் காரணமாக, அருகிலுள்ள தென்னை மரங்களிலிருந்து கிடைத்த இளநீர் நிறம் மாறியதாகச் செய்திகள் வெளியாகின. 

கடிவாளம் போட்ட நீதிமன்ற தீர்ப்புகள் 

கடந்த 2006 டிசம்பர் 22 ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் திருப்பூரில் மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றாத சாயமிடும் மற்றும் சலவை ஆலைகளை மூட உத்தரவிட்டது. இதுதொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், 2009 அக்டோபர் 6 ஆம் தேதி உச்ச நீதிமன்றமும் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. பின்னர், 2011 ஜனவரி 28 ஆம் தேதி, ஜீரோ லிக்விட் டிஸ்சார்ஜ் (Zero Liquid Discharge – ZLD) முறையைச் செயல்படுத்தும் வரை திருப்பூரில் உள்ள சாயமிடும் மற்றும் சலவை ஆலைகளையும் அவற்றின் பொதுக் கழிவுநீர் மற்றும் தனிப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்களையும் உடனடியாக மூட சென்னை உயர் நீதிமன்றம் வெளிப்படையான உத்தரவைப் பிறப்பித்தது. 

இந்த உத்தரவுகள் ஏற்றுமதி வர்த்தகத்தையும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதித்தது. இந்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) தகவலின்படி, 18 பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் (CETPs) மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது. மேலும், 68 தனிப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நடவடிக்கைக்கு உள்ளாகின.

இதை தொடர்ந்து,  ஜவுளித் தொழிலை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில், 18 பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்தத் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது 2011ல் தமிழ்நாடு அரசு 179.34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. ZLD தொழில்நுட்பத்தை நிறுவி, சோதனை அடிப்படையில் செயல்பட அனுமதி பெற்ற பின்னர், 2012 ஜூன் மாதம் முதல் ஆலைகள் படிப்படியாக மீண்டும் இயங்கத் தொடங்கின. 

பல விதிமுறைகளை விதித்துள்ள சர்வதேச சந்தை

இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் சுமார் 55 சதவீதம் திருப்பூரிலிருந்து நடப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவிக்கின்றது. சர்வதேசச் சந்தைகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்யும் திருப்பூர் நிறுவனங்கள், கடுமையான சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய நிர்பந்தம் இருக்கின்றது. ஆடைகளில் கன உலோகங்கள் மற்றும் அசோ சாயங்கள் (Azo Dyes) போன்ற அபாயகரமான பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவை மீறாமல் இருக்கவேண்டும். அதற்கு EU REACH மற்றும் US CPSIA போன்ற அளவீடுகள் இருக்கின்றன. 

அதேபோல், பருத்தி எங்கிருந்து வருகிறது என்பது உட்பட முழு விநியோக சங்கிலி (supply chain) குறித்த தகவல்களையும் அமெரிக்காவின் Uyghur Forced Labor Prevention Act (UFLPA)-இன் கீழ்  சமர்ப்பிக்க வேண்டும். மேலும், OEKO-TEX Standard 100, Global Organic Textile Standard (GOTS), Sedex/SMETA மற்றும் BSCI போன்ற சர்வதேசத் தரச்சான்றிதழ்களையும் நிறுவனங்கள் பெறுகின்றன. இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் (India–EU Free Trade Agreement – FTA) கீழ் கிடைக்கக்கூடிய சுங்க வரிச் சலுகைகளைப் பெறுவதற்கும், ஒப்பந்த விதிமுறைகள் மற்றும் மூலப்பொருட்களின் தோற்றம் தொடர்பான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வது அவசியமாக இருக்கிறது.  

கைகொடுக்கும் தொழில்நுட்பம்

சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் சிக்கல் இல்லாமல் இயங்க தொழில்நுட்பம் அவற்றுக்கு உறுதுணையாக இருக்கின்றது. குறிப்பாக ZLD எனும் Zero Liquid Discharge (ZLD) தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இம்முறையில், சாயமிடுதல் மற்றும் சலவைச் செயல்முறைகளில் உருவாகும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது.

 

ZLDS Process
Effluent Treatment Process
Effluent tank
Effluent BioTreatment Plant
RO Process
RO Process
Salt obtained in ZLD process

 

மீதமுள்ள உப்புகள் மற்றும் திடக்கழிவுகள் தனியாகப் பிரித்தெடுக்கப்படுவதால், திரவக் கழிவுகளை நீர்நிலைகளில் வெளியேற்றுவதைத் தவிர்க்க முடிகிறது. இதன் மூலம் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதுடன், நொய்யல் ஆறு போன்ற நீர்நிலைகளின் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், சர்வதேசச் சந்தைகளின் சுற்றுச்சூழல் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் ZLD உதவுகிறது. ஆனாலும், இதில் கிடைக்கும் ஒரு பகுதி உபரி உப்புகளால் எவ்வித பயனும் இல்லை என்றும், அவற்றை என்ன செய்வதென தெரியாமல் தவிப்பதாகவும் CETP உரிமையாளர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்துகின்றனர். இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். 

 

மாற்றத்தை நோக்கி திருப்பூர்

ZLD அமல்படுத்தப்பட்ட பிறகும் நொய்யல் ஆற்றுக்கு அருகிலுள்ள சில பகுதிகளில் நிலத்தடி நீரில் உப்புத்தன்மையும் மாசுபாடும் தொடர்ந்து காணப்படுகிறது. இதற்கு காரணம், ஏற்கெனவே நிலத்தடி நீர் மற்றும் மண்ணில் தேங்கியிருந்த மாசுபாடுகள் உடனடியாக மறையாமல் இருக்கின்றன. அவற்றை சீரமைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.  ZLD மட்டுமில்லாமல், திருப்பூர் மற்றும் நொய்யல் ஆற்றுப் பகுதிகளில் நீர்வள மறுசீரமைப்பு மற்றும் பசுமை மேம்பாட்டுக்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற முயற்சிகளின் வழியாக, கடந்த கால தவறுகளை திருத்திக்கொண்டு மாற்றத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது திருப்பூர்.

Related Posts