சிறப்பு கட்டுரைகள்

காற்றின் பயணம்…

இந்தியா மிக நீண்ட கடற்கரையையும் சாதகமான காற்றையும் உடையது. உலகின் மிகப்பெரிய காற்று மின்சார சந்தையை இந்தியா நிதானமாக கட்டியெழுப்பி, உலகின் முன்னணி காற்று ஆற்றல் கொண்ட நாடாக இருக்கிறது.

கடந்த 2015ல் 25 ஜிகா வாட் திறன் கொண்ட மின் காற்றாலையை இந்தியா நிறுவியது. காற்று வளம் கொண்ட தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேஷ் ஆகிய மாநிலங்களிலேயே பெரும்பாலான திட்டங்கள் குவிந்தன. 2017 வரை, ஊக்கமளிக்கும் திட்டங்களான துரிதப்படுத்தப்பட்ட தேய்மானம் (accelerated depreciation), உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகைகள் (generation based incentives) மற்றும் முன்னுரிமை மின் கொள்முதல் கட்டணங்கள் (preferential feed-in tariffs) போன்றவற்றால் இந்த துறை அதிவேக வளர்ச்சி அடைந்தது. இந்திய காற்றாலைத் துறையில் ஒரே நிதியாண்டில் சேர்க்கப்பட்ட மிக அதிகபட்ச புதிய திறனாக, 2016-17 நிதியாண்டில், புதிதாக சுமார் 5.5 ஜிகாவாட் (5,500 மெகாவாட்) காற்றாலை மின் உற்பத்தித் திறன் நிறுவப்பட்டது.

ஒரு மிகப்பெரிய திருப்புமுனை 2017ல் அமைந்தது. மின் கொள்முதல் கட்டணங்களில் இருந்து போட்டி ஏல முறைக்கு இந்தியா மாறியது. அது கட்டணங்களை குறைத்தாலும், வெளிப்படை தன்மை கொண்டதாக இருந்தாலும், புதிய காற்றாலை திட்டங்கள் தற்காலிகமாக குறைந்தன. நிலம் கையப்படுத்துதல், மின்சாரத்தை கொண்டு செல்லும் பரிமாற்ற (Transmission) வசதிகள் பற்றாக்குறை, திட்டங்களை காலக்கெடுவில் நிறவேற்றாமல் இருத்தல் மற்றும் குறைந்த மின் கொள்முதல் விலை போன்றவற்றால் காற்றாலைத் திட்டங்களை உருவாக்கும் நிறுவனங்கள் சவால்களை சந்தித்தன. 2025ன் இறுதியில், இந்தியாவின் காற்றாலை திறன் 56 ஜிகா வாட் திறனை தாண்டியது. கடந்த 10 ஆண்டுகளின் காற்றாலை திறனை காட்டிலும் அது இரண்டு மடங்கு அதிகம். அதேபோல 2026 நிதியாண்டில், ஆண்டொன்றில் புதிய காற்றாலை திறன் 6 ஜிகா வாட்டிற்கும் அதிகமாக சேர்க்கப்பட்டு, இந்திய காற்றாலைத் துறையின் வரலாற்றிலேயே ஒரு ஆண்டின் அதிகபட்சம் என்ற சாதனை பதிவு செய்யப்பட்டது.

தற்போதைய நிலை

குறிப்பாக குஜராத் இந்த துறையில் வலுவாக மாறியது. அதற்கு முக்கிய காரணம் காற்று வளம், சாதகமான கொள்கைகள் மற்றும் பெரிய புதிதுபிக்கத்தக்க ஆற்றல் பூங்காக்கள். அதேபோல காற்றுவளமும், உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குபவர்களுக்கு ஏற்ற சூழலும் இருப்பதால், தமிழ்நாடு இந்த துறையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருகிறது.

ஆதரவான கொள்கைகள், மேம்படுத்தப்பட்ட காற்று சுழலி (turbine) தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு வளர்ந்துவரும் பெருநிறுவன தேவைகள் மற்றும் காற்று, சூரிய சக்தி மற்றும் சேமிப்பு வசதிகளை ஒருங்கிணைக்கும் கலப்புத் திட்டங்களின் வளர்ச்சி ஆகியவற்றால் இந்தியாவின் காற்றாலைத் துறை பயனடைந்து வருகிறது. வலுவான உள்நாட்டு உற்பத்தி தளம் போட்டியை இன்னும் அதிகரிக்கின்றது. இருந்தலும், நிலம் கையகப்படுத்துதலில் நிலவும் சிக்கல்கள், மின்சாரத்தை கொண்டு செல்லும் பரிமாற்ற (Transmission) வசதிகள் பற்றாக்குறை, அதிக விலை, திட்டங்களை காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுவதில் தாமதம் மற்றும் காற்றாலை மின்சாரத்தை மின் வலையமைப்புடன் (Grid) திறம்பட ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் போன்ற சவால்கள் இன்னும் நீடிக்கின்றன. இந்த துறையின் வளர்ச்சியை நிலையாக வைத்திருப்பதற்கு இந்த சிக்கல்களை கவனிப்பது மிக முக்கியம்.

இந்தியாவில் காற்றாலை துறையின் எதிர்காலம் மிகவும் நம்பிக்கை தரும் வகையில் இருக்கிறது. 2030க்குள் 100 ஜிகா வாட் திறனை எட்டவேண்டும் என்ற பெரிய இலக்கை மத்திய அரசு கொண்டுள்ளது. சில நீண்டகால திட்டங்கள் 2036க்குள் 156 ஜிகா வாட் காற்றாலை திறனை எட்ட திட்டமிட்டுள்ளன.

(இக்கட்டுரை இண்டஸ்ட்ரியல் எகனாமிஸ்ட்டில் வெளியான அசல் கட்டுரையின் தமிழாக்கம். தமிழாக்கம்: வீரச்செல்வி மதியழகன்.)

Click here for Original

Related Posts