பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குகளால், இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தச் சூழ்நிலை, இந்திய பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தையை பாதிக்குமா என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழுகிறது.

இந்தியா பாகிஸ்தானை தாக்கிய சில நொடிகளிலேயே, பாகிஸ்தான் பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. அதன் விளைவாக அந்த நாட்டு பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கியது. ஆனால் இந்தியாவில் அதன் தாக்கம் நீடிக்கவில்லை. எதிர்மாறாக, “ஆபரேஷன் சிந்தூர்” தொடங்கியதும், சென்செக்ஸ் சுமார் 692 புள்ளிகள் மற்றும் நிஃப்டி 146 புள்ளிகள் சரிவுடன் தொடங்கினாலும், சில மணி நேரங்களுக்குள் அவை ஃபிளாட்லைன் நிலைக்கு அருகில் வர்த்தகமானது.
இதுபோன்ற ராணுவ நடவடிக்கைகள் முதலீட்டாளர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் இயல்பான நிலைக்கு திரும்பியது என்பது புதிய முதலீட்டாளர்களுக்கு சற்று வியப்பாகவே இருக்கலாம். ஆனால் வரலாறு சொல்வதோ வேறு.
கடந்த கால பங்குசந்தை:
நாம் பாட்டன் காலத்தில் இருந்து இன்று வரை இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் தொடர்ந்து நிலவுகின்றது. 1999 கார்கில் போர், 2001 நாடாளுமன்றத் தாக்குதல், 2008 மும்பையில் 26/11 பயங்கரவாதத் தாக்குதல்கள், 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் உரி மற்றும் பாலகோட் நடவடிக்கைகள் என இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தின் ஒவ்வொரு முக்கிய தாக்குதலிலும் இந்திய பங்குச்சந்தையில் தாக்கம் இருந்து வருகிறது. இதுவரை நிஃப்டி 50 அதிகபட்சமாக சுமார் 5% சரிவை சந்தித்துள்ளது, பின்னர் குறுகிய காலத்திலேயே இயல்பு நிலைக்கு திரும்புவதுடன் ஆறு மாதங்களுக்குள் 2 டிஜிட் லாபமும் கொடுத்துள்ளது.

கார்கில் போருக்குப் பிறகு, நிஃப்டி ஒரு மாதத்தில் 16.5%, அடுத்த ஆண்டில் கிட்டத்தட்ட 30% உயர்ந்தது. 26/11 மும்பை தாக்குதல்கலுக்கு பிறகு அடுத்தடுத்த 12 மாதங்களில் 82% ஏற்றம், புல்வாமா-பாலகோட் நிகழ்வுக்கு பிறகு நிஃப்டி ஒரு மாதத்திற்குள் 6.3% மற்றும் ஒரு வருடத்தில் 12.7% உயர்ந்தது. 2001 நாடாளுமன்றத் தாக்குதளுக்கு பிறகு மட்டும் நிஃப்டி 13.9% சரிந்தது, ஆனால் இந்தக் காலகட்டத்தில் உலகளாவிய சந்தையும் சரிவுடன் இருந்தது.
சரியாத இந்திய பங்குச்சந்தை:
இந்திய பங்குச்சந்தையின் தற்போதைய நிலைப்பாட்டை நிர்ணயிப்பதில் பல முக்கிய காரணிகள் உள்ளன. முதன்மையாக, இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது. சில மாதங்களுக்கு முன், இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) தங்கள் பங்குகளை விற்றது இதற்குக் காரணமாக அமைந்தது. இதன் விளைவாக, இந்திய பங்குச்சந்தை undervalued நிலையில் இருந்தது. இந்த நிலைமையைக் கவனித்த வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி திரும்பினர். இதன் விளைவாக, கடந்த 15 நாட்களில் மட்டுமே FIIக்கள் சுமார் ரூ. 44,000 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். இதனால் சந்தை மீண்டும் வலுவடைந்துள்ளது. மேலும், தற்போதைய ரீடெயில் முதலீட்டாளர்கள் நீண்டகால லாபத்தையே முக்கியமாகக் கருதி முதலீடு செய்கிறார்கள். எனவே, இத்தகைய குறுகிய கால பதற்றங்கள் அவர்களைப் பெரிதாக பாதிக்கவில்லை.
இது மட்டுமின்றி பலவீனமான டாலர் மதிப்பு, அமெரிக்கா மற்றும் சீனாவில் வளர்ச்சி மந்தநிலை மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவு போன்ற உலகளாவிய காரணிகள் இந்திய சந்தையை நிலையாக வைத்துள்ளன. இதன் விளைவாக, சந்தையின் கவனம் குறுகிய கால பதற்றங்களை விட நிலையான பொருளாதார வளர்ச்சியில் உள்ளது.








