ஆகஸ்ட் 15, 2025 முதல், தனியார் வாகனங்களுக்கு புதிய வருடாந்திர டோல் பாஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் வருடத்திற்கு 200 முறை வரை இலவச பயணம் செய்துகொள்ளலாம். டிஜிட்டல் சுங்கக் கட்டண முறையை எளிதாக்கவும், அடிக்கடி நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களுக்கு பயனளிக்கும் விதமாக இது அமையும் என தெரிவித்துள்ளது. இதற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?… இதனால் ஒரு தனி வாகனம் எவ்வளவு சேமிக்க முடியும்?…
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல், இந்தியா முழுவதும் அமலுக்கு வரும் என போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது X தளத்தில் தெரிவித்துள்ளார். வருடம் தோறும் ₹3,000 செலுத்தினால், குறைந்த சுங்கச்சாவடி கட்டணத்தில் தடை இன்றி பயணம் செய்ய முடியும். ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக 200 முறை கடந்து செல்ல முடியும். சரக்கு வாகனங்கள் அல்லாது தனியார் கார்கள், ஜீப்புகள், வேன்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே பொருந்தும். NHAI பராமரிக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் (NH) மற்றும் தேசிய விரைவுச்சாலைகள் (NE)-இல் உள்ள சுங்கச்சாவடிகளில் மட்டுமே செல்லுபடியாகும். இது, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளூர் சாலைகள் அல்லது மாநில விரைவுச்சாலைகள் ஆகியவற்றில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு பொருந்தாது. அந்த இடங்களில், உங்கள் வழக்கமான FASTag ஐ பயன்படுத்தி, சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்.

எங்கே, எப்படிப் பெறுவது?
இந்த வருடாந்திர பாஸை RajmargYatra மொபைல் செயலி அல்லது NHAI வலைத்தளத்தின் மூலம் மட்டுமே வாங்க முடியும். இதற்காக, உங்கள் வாகனத்துக்கு தொடர்புடைய தனியார் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் FASTag இருக்க வேண்டும். பின்னர், உங்கள் வாகனப் பதிவு எண் (VRN) சரிபார்க்கப்படும். இதற்கு புதிய FASTag தேவைப்படுமா? இல்லை. ஏற்கனவே FASTag இருந்தால், புதியதாக பதிவு செய்ய தேவையில்லை. இந்த வருடாந்திர டோல் பாஸ் அனைவருக்கும் கட்டாயம் அல்ல. முன்பு உங்களிடம் இருந்த FASTag-ல் தொடரலாம்.
எவ்வளவு லாபம்:
தினமும் நகரத்திலிருந்து புறநகர் பகுதிக்குச் செல்லும் ஒருவர், தினசரி டோல் கட்டணமாக ₹60 செலுத்த வேண்டும். இதனால் சராசரியாக மாதம் ₹1,800, ஆண்டுக்கு ₹21,600 வரை செலவாகிறது. நகர்ப் பகுதிகளில் பயணிக்கும் ஒருவர், ஆண்டுக்கு சுமார் ₹14,400 செலவழிக்கிறார். ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்துக்கு பயணம் செய்பவர்கள், ஆண்டுக்கு ₹36,000 வரை செலவு செய்கின்றனர். குறுகிய தூரத்துக்கு பயணிப்பவர்களும் ஆண்டுக்கு ₹10,800 செலவு செய்கின்றனர். இந்த சூழ்நிலையில், வருடாந்திர டோல் பாஸ் அறிமுகமாகும் பட்சத்தில், மொத்தம் ₹3,000 மட்டுமே செலுத்தினால் போதுமானது. இதன் மூலம், ₹18,600 முதல் ₹33,000 வரை சேமிக்கலாம். குறுகிய தூர பயணிகளும் ஆண்டுக்கு ₹7,800 வரை மிச்சப்படுத்த முடியும்.









