மாஸ்கோவில் நடந்த ஒரு தொழில்நுட்ப நிகழ்வில், ரஷ்யாவின் முதல் மனித வடிவ ரோபோவான ‘ஏஐடல்’ (AIdol) அறிமுகப்படுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே மேடையில் திடீரெனச் சமநிலை இழந்து கீழே விழுந்தது.
ஐடல் ரோபோடிக்ஸ் (AIdol Robotics) உருவாக்கிய இந்த ரோபோ, மனித முகபாவனைகள், சிந்தனை, உணர்வுகள் அனைத்தையும் வெளிப்படுத்தும் திறன் உடையது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரோபோ, இரண்டு ஊழியர்களால் மேடைக்கு அழைத்து வரப்பட்டபோது, திடீரெனச் சாய்ந்து விழுந்து அதன் பாகங்கள் சிதறின.

இந்தத் தடுமாற்றத்திற்குக் காரணம், ரோபோவின் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளில் இருந்த தொழில்நுட்பக் கோளாறுகளே என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இது இன்னும் பரிசோதனையிலேயே (Testing phase) இருக்கும் ஒரு திட்டத்தின்போது நடந்த தவறு என்றும் விளக்கமளித்துள்ளது.
“இந்தத் தவறு ஒரு நல்ல அனுபவமாக மாறும்,” என்று ரோபோவை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித வடிவ ரோபோக்களை உருவாக்கும் போட்டியில் ரஷ்யா முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி பேசுபொருளாகி உள்ளது.
இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி, சிலர் கேலி செய்யவும், பலர் ரோபோடிக்ஸ் முயற்சிக்குப் பாராட்டவும் செய்தனர்.









