பொதுதொழில்நுட்பம்

சென்னையில் காலடி வைத்தது டெஸ்லா…  

கார் பிரியர்களின் பட்டியயில் முக்கிய இடத்தில் உள்ள டெஸ்லா தனது அனுபவ மையத்தை (Experience Store) சென்னையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் துவங்கியுள்ளது. மும்பை, ஹைதெராபாத் என மற்ற ஊர்களுக்கு சென்று  டெஸ்லா காரை வாங்கிய தமிழ்நாடு கார் பிரியர்கள்,  இனி நேரடியாகவே டெஸ்லா கார்களைப் பார்வையிட்டு, டெஸ்ட் டிரைவ் செய்து, புக்கிங் மற்றும் டெலிவரி சேவைகளை சென்னையிலே  பெற முடியும்.

கூடுதலாக, வாடிக்கையாளருக்கு சிறந்த சேவை  வழங்கும் வகையில் பூந்தமல்லியில் அங்கீகரிக்கப்பட்ட மோதல் பழுதுபார்ப்பு (Collision Center) மற்றும் சேவை மையத்தை அமைத்துள்ளது. அசல் Tesla உதிரிபாகங்கள், தொழில்முறை பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள், மென்பொருள் சார்ந்த பழுது கண்டறியும் வசதிகள் மற்றும் Tesla தரத்தில் செய்யப்படும் மோதல் பழுதுபார்ப்பு ஆகியவை வாடிக்கையாளருக்கு கிடைக்கும் என டெஸ்லா இந்தியா கூறுகிறது. 

இந்த  எக்ஸ்பீரியன்ஸ் சென்டரில் புதிய மின்சார கார் மாடல் Y பிரிமீயம் மற்றும் மாடல்YL  ஆகியவை கிடைக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.  5 சீட்டர் எலெக்ட்ரிக் காரான Y பிரிமீயம் மாடலில்  ஒரு முறை முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்தால் WLTP சான்றுபடி 500 கிமீ தூரம் வரை பயணிக்கலாம் என்று டெஸ்லா தெரிவித்துள்ளது. இந்த காரின் எக்ஸ்ஷோரூம் விலை  ரூ.50.89 லட்சமாக உள்ளது.  

அதேபோல, 6 இருக்கைகள் கொண்ட YL மாடலில்  முழுமையாக சார்ஜ்  செய்தால், WLTP சான்றுபடி 681 கிமீ ரேஞ்ச் வரை வழங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ.61.99 லட்சமாக  இருக்கிறது.

மேலும், வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ற வகையில் ஒய் பிரீமியம் மாடலுக்கு ரூ.6 லட்சம் முன்பணமும், மாதம் ரூ.39,990 மாதத் தவணை வசதியும் , ஒய் எல் மாடலுக்கு ரூ.6.50 லட்சம் முன்பணமும், மாதம் ரூ.49,990 மாதத்தவணை திட்டமும் வழங்கப்படுகின்றன.

Related Posts