பொது

‘மதயானை கூட்டம்’ இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் மரணம்

‘மதயானைக் கூட்டம்’, ‘இராவணக் கோட்டம்’ படங்களின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்.

1990களில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னையை நோக்கி வந்தவர்களில் விக்ரம் சுகுமாரனும் ஒருவர். பின்னாளில் வெற்றிமாறன், சீனு ராமசாமி, ராம் ஆகிய இயக்குநர்களைப் போலவே, இவர் இயக்குநர் பாலு மகேந்திராவின் உதவியாளர் ஆகி தனது திரை பயணத்தை தொடங்கினார். வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடிகராகவும் அறிமுகம் ஆனார்.

பின்னர் வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் மதுரை வட்டார மொழிப் பயிற்றுநராகவும், படத்தின் எழுத்தாளராகவும் பணியாற்றினார்.

திரைத்துறையில் அடுத்த பரிமாணமாக, ‘மதயானைக் கூட்டம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சுகுமாரன். இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மதுரையை கதைக்களமாகக் கொண்டு உருவாகியிருந்த இப்படம், முட்டாள்தனமான வன்முறையை கவுரவமாகக் கருதும் ஒரு சமூகத்தின் முகத்திரையை கிழிக்கும் படமாக அமைந்தது.

2023-ல் வெளியான ‘இராவணக் கோட்டம்’ திரைப்படம் இவரது கடைசி படமாக அமைந்தது. நேற்று மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு பேருந்து ஏறும் போது மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவரை மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

விக்ரம் சுகுமாரனின் மறைவு குறித்து இயக்குநர் சீனு ராமசாமி, “ஆசான் பாலுமகேந்திரா அவர்களின் சீடரும் இந்திய திரைப்பட இயக்குனரும் விக்ரம் சுகுமாரனின் மறைவு ஈடில்லா பெரு இழுப்பு. எனது திரைப்படத்தில் விக்ரம் நடிப்பதற்கு இசைந்து அது தொடங்கி பின்னர் உருவாவதற்கு தாமதமாகவும் நாங்கள் இருவரும் அதற்கு காத்திருக்கும் இவ்வேளையில் அவரின் பிரிவு மனம் ஏற்க மறுக்கிறது. என்னை சீனி என்று அழைக்கும் அறம் பேசும் இதயமுள்ள ஒரு கலைஞன் இனி இல்லை என” எனக் கூறியுள்ளார். நடிகர் வேல்ராமமூர்த்தியும், “என்னை சினிமாவுக்குள் இழுத்து வந்தவர். நான் உண்ணும் சினிமா சோற்றின் ஒவ்வொரு பருக்கையிலும் அவன் பெயர் எழுதப்பட்டிருக்கிறது. தாங்க முடியாத துயரம்” என தனது ஆழ்ந்த வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.

விக்ரம் சுகுமாரன் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts