”நேரமே சரியில்ல.. எல்லாமே தப்பு தப்பா நடக்குது” என்று நம்மில் பலர் சொல்வதுண்டு.. ஆனால் நேரத்தை காட்டும் கடிகாரம் விற்பனை செய்யும் உலகின் முன்னனி வாட்ச் நிறுவனத்திற்கே இப்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
உலகில் வாட்ச் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்று ”ஸ்வாட்ச்” நிறுவனம். சுவிஸர்லாந்தை சேர்ந்த இந்த நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்தில், ஒரு ஆண் மாடல் தனது கண்களை சீனர்களின் கண்களைப்போல் (“slanted eye”) வைத்து போஸ் கொடுத்துள்ளார். இந்த போஸ், சீனர்கள் உட்பட ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்களை மட்டம் தட்டுவது போல இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து இந்த நிறுவனம் தங்களுடைய விளம்பரத்தை நீக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஸ்வாட்ச் நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுள்ளது.

கொஞ்சம் மேல்நோக்கி சாய்வாக, சிறிதாக இருக்கும் கண்களை மங்கோலிய கண்கள் என்றும், அதைவைத்து ஆசியாவை சேர்ந்தவர்களை பலர் கேலி செய்வதும் உண்டு. அழகு சாதன பொருட்கள் உற்பத்தி செய்யும் ’டையர்’ (Dior) என்ற நிறுவனம், 2023ல் இதேபோல சாய்வான கண்களை மையப்படுத்தி வெளியிட்ட விளம்பரம் கொரியாவில் சர்சையை ஏற்படுத்திய நிலையில், அந்நிறுவனம் அந்த விளம்பரத்தை நீக்கியது.
அதேபோல,2018 ஒரு ஆசிய பெண்மணி இத்தாலிய உணவை சாப்ஸ்டிக்கில் (chop stick) சாப்பிட முயற்சிப்பது போன்ற விளம்பரத்தை இத்தாலிய நிறுவனமான டோல்ஸ் & கபனா (Dolce & Gabbana) வெளியிட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வரிசையில் இப்போது ஸ்வாட்ச் நிறுவனமும் சேர்ந்துள்ளது.

ஸ்வாட்ச் நிறுவனத்தின் மொத்த உற்பத்தியில் 27% பொருட்கள், சீனா மற்றும் ஹாங்காங் பகுதியில் விற்பனையாகிறது. ஆனால் அதை ஸ்வாட்ச் நிறுவனம் மறந்துவிட்டு, கவனக்குறவாக விளம்பரம் வெளியிட்டிருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர். இந்நிலையில், “இந்த விளம்பரம் ஏற்படுத்திய குழப்பங்களுக்கும் மனதார மன்னிப்பு கேட்கிறோம்.இந்த விளம்பரம் நீக்கப்பட்டுள்ளது” என்று ஸ்வாட்ச் நிறுவனம் கூறியுள்ளது. சிலர் இது ஸ்வாட்ச் நிறுவனத்தின் விளம்பர யுக்தியாக இருக்கலாம் என்று விமர்சித்துள்ளனர்.









