வணிகம்

செப்டம்பர் மாத கிரெடிட் கார்டு செலவினம் 5.9% சரிவு: CareEdge அறிக்கை

கிரெடிட் கார்டுகள் மூலமான செய்யப்படும் செலவினம், கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தை ஒப்பிடும் பொது இந்த ஆண்டு, 5.9 சதவீதம் சரிந்து ரூ.2.04 லட்சம் கோடியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CareEdge Ratings வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு பதிவான முதல் சரிவாக இது இருக்கிறது. கடந்த ஆண்டு அதிக அளவில் செலவினம் பதிவானதே இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணம் என்று CareEdge Ratings தெரிவித்துள்ளது.

கடந்த 2025 செப்டம்பரில், GST வரி விகிதக் குறைப்புகள் அமலுக்கு வந்ததாலும், மாதத்தின் கடைசி வாரத்தில் பண்டிகைக் கால ஆன்லைன் விற்பனை தொடங்கியதாலும், ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது கிரெடிட் கார்டு மூலம் செய்யப்பட்ட செலவினம் 13.3 சதவீதம் அதிகரித்திருந்தது. ஆனால், நடப்பாண்டில் பண்டிகைக் கால விற்பனை அக்டோபர் மாதத்தில் துவங்கியுள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆன்லைன் மூலமான செய்யப்பட்ட செலவினம் 12.5 சதவீதம் சரிந்துள்ளது. அதேவேளை, கடைகளில் உள்ள விற்பனை முனையங்கள் (Point of Sale – POS) மூலமான செய்யப்பட்ட செலவினம் 7.2 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இதன் விளைவாக, மொத்த கிரெடிட் கார்டு செலவினத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகளின் பங்கானது, 469 அடிப்படைப் புள்ளிகள் (Basis Points) குறைந்து 61.70 சதவீதமாக மாறியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது தனியார் வங்கிகளின் பங்கு, 44 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து 73.78 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியின் கிரெடிட் கார்டு செலவினம் ஆண்டுக்கு ஆண்டு 7.7 சதவீதம் வளர்ச்சி கண்டதே இதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. அதேவேளையில், மற்ற பெரிய கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகளின் செலவினம் சரிவைக் கண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பொதுத்துறை வங்கிகளின் (PSBs) சந்தைப் பங்கு, மாத அடிப்படையில் 34 அடிப்படைப் புள்ளிகள் குறைந்து 20.41 சதவீதமாகியுள்ளது. இருந்தாலும், பாரத ஸ்டேட் வங்கியைத் (SBI) தவிர பிற பொதுத்துறை வங்கிகளின் கிரெடிட் கார்டு செலவினம் ஆண்டுக்கு ஆண்டு 26.3 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
கிரெடிட் கார்டுகளின் மொத்த எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 10.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், ஒரு கார்டுக்கான சராசரி செலவினம் 14.8 சதவீதம் குறைந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 23.2 சதவீதம் அதிகரித்திருந்தாலும், ஒரு பரிவர்த்தனைக்கான சராசரித் தொகை 23.6 சதவீதம் குறைந்து ரூ.3,343 ஆக உள்ளது. தற்போது அதிக எண்ணிக்கையிலான கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் UPI மூலமாக மேற்கொள்ளப்படுவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.
மேலும், கடந்த ஆண்டு செப்டம்பரில் காணப்பட்ட அதிக மதிப்பிலான பண்டிகைக் காலக் வியாபாரம், இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் நடைபெறாததும் சராசரிப் பரிவர்த்தனைத் தொகை குறைவதற்குக் காரணமாக அமைந்திருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் பண்டிகைக் கால விற்பனை தொடங்குவதால், கிரெடிட் கார்டு செலவினம் ரூ.2.28 லட்சம் கோடி முதல் ரூ.2.38 லட்சம் கோடி வரை அதிகரிக்கும் என CareEdge எதிர்பார்க்கிறது.

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களின் செலவினங்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் 0.4 சதவீதம் மட்டுமே சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், செப்டம்பர் மாதத்தில் பதிவான பெரும்பாலான சரிவு, பண்டிகைக் கால விற்பனை அக்டோபர் மாதத்துக்கு மாறியதன் காரணமாகவே ஏற்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது.

இருப்பினும், செப்டம்பர் மாதத்துக்கு முன்பே கிரெடிட் கார்டு செலவின வளர்ச்சி வேகம் குறையத் தொடங்கியிருந்தது. ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்தது. இது Q1FY27 காலாண்டில் பதிவான 7.9 சதவீத வளர்ச்சியைவிடக் குறைவானது.

Q2FY27 காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டபோது, பண்டிகைக் காலம் செப்டம்பரிலிருந்து அக்டோபர் மாதத்துக்கு மாறியதே ஆண்டுக்கு ஆண்டு செலவின வளர்ச்சி குறைந்ததற்குக் காரணம் என்று பல முன்னணி கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகள் தெரிவித்ததாக CareEdge குறிப்பிட்டுள்ளது.

2026-27 நிதியாண்டின் முதல் அரையாண்டில் (H1FY27), கிரெடிட் கார்டு செலவினத்தை கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டோமானால், அது 4.9 சதவீதம் அதிகரித்து ரூ.12.18 லட்சம் கோடியாக உள்ளது. இதில், முதல் காலாண்டில் (Q1FY27) 7.9 சதவீதமாக இருந்த வளர்ச்சி, இரண்டாவது காலாண்டில் (Q2FY27) 2.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் ஏற்பட்ட சரிவே இதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.

இருந்தாலும், பண்டிகைக் கால விற்பனையின் காரணமாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் செலவினம் மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts