KICL நிறுவனம் திறன் மேம்பாட்டு பயிற்சி பள்ளியை அமைக்க, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் செய்துள்ளது.
இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.32,000 கோடிக்கு மதிப்பீட்டில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின. இந்த மாநாட்டில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துடன் இணைந்து காலணி உற்பத்தி தொடர்பான திறன் மேம்பாட்டு பள்ளியை நடத்துவதற்கு கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KICL) நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தாரேஸ் அகமது மற்றும் KICL நிறுவனத் தலைவர் ஜே.ரஃபீக் அகமது ஆகியோர் இந்த ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.
KICL நிறுவனம், பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் காலணி உற்பத்தி தொழிற்சாலையை அமைத்து, ‘Crocs’ காலணிகளை உற்பத்தி செய்து வருகிறது. பின்தங்கிய கிராமப்புறத்தில் தொழிற்சாலையை அமைத்து, உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க, திறன் பயிற்சி வழங்கும் கடமையையும் KICL நிறுவனம் செய்து வருகிறது.

இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஐடிஐ வளாகத்திற்குள் திறன் மேம்பாட்டு பள்ளியை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒப்புதல் பெற்ற பின், அங்கு பயிற்சி மையம் கட்டப்பட்டு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், காலணி உற்பத்தி மற்றும் டிரோன் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், தமிழ்நாடு அரசுடன் இணைந்து KICL நிறுவனம் வழங்க உள்ளது.









