நமது அனைவரின் கவனமும் தங்கத்தின் மீதில்தான் உள்ளது. ஆனால், தங்கத்தைவிட குறைந்த ஆபத்தும், அதிக லாபமும் தரக்கூடிய ஒரு முதலீடாக வெள்ளி மாறி வருகிறது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருப்பதால், நடுத்தர மக்களின் கைகளில் எட்டா கனியாக மாறிவருகிறது. இதற்கு மாற்றாக வெள்ளியை வாங்க பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர் . வெள்ளிக்கு திடீர் மவுசு வர காரணம் என்ன? வருங்காலங்களில் அதன் விலை உயருமா?
முதலில், வெள்ளி எதற்கெல்லாம் பயன்படுகிறது என பார்ப்போம். தொழில்நுட்ப வளர்ச்சியால், இன்று பல துறைகளிலும் வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளது. எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் பல முக்கிய பொருட்கள், சோலார் பேனல்கள், தினசரி பயன்படுத்தும் செல்போன்கள், மருத்துவ உபகரணங்கள், ராக்கெட்கள், செமிகண்டக்டர்கள் போன்ற வளர்ந்து வரும் முக்கிய துறைகளில் அதிகம் பயன்படுத்துவது வெள்ளியை தான். கடந்த சில ஆண்டுகளாக வெள்ளி விலை உயர்வதற்கு முக்கிய காரணம் இதுவே.
ஆனால், இந்த தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு உலகளவில் வெள்ளி உற்பத்தி இருக்கிறதா என கேட்டால்.. இல்லை. தொழில்துறையில் மட்டும் வெள்ளிக்கான தேவை உலகளவில் 50%-ஐ தாண்டியுள்ளது. மேலும், கிரீன் எனர்ஜி துறையில் அனைத்து நாடுகளும் கவனம் செலுத்தி வருவதால், வெள்ளியின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஒருபுறம் தொழில்துறை… மறுபுறம் முதலீட்டு… பங்குசந்தையில் சரிவு ஏற்படும் பொழுது, நஷ்டங்களைத் தவிர்ப்பதற்காக முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளி போன்ற கமாடிடி மார்க்கெட்டுகளின் பக்கம் திரும்புவர். தங்கத்தை போல வெள்ளியும் பணவீக்கம் மற்றும் நாணய மதிப்பிழப்புக்கு எதிரான பாதுகாப்பு முதலீடாக உள்ளது. அதனால்தான், டைவர்சிபிகேஷன் (Diversification) குறித்து பலரும் பேசுகிறார்கள். சமீபத்திய காலங்களில் தங்கத்தைப் போலவே வெள்ளியிலும் நல்ல லாபம் கிடைத்துள்ளதால், மியூச்சுவல் பண்டுகள் மற்றும் சிறிய முதலீட்டாளர்கள் வெள்ளியை தேர்ந்தெடுக்கின்றனர்.
இந்தியாவில் வெள்ளியின் விலை யாரும் எதிர்பாராத அளவிற்கு உயர்ந்துள்ளது. 2015ஆம் ஆண்டில் ஒரு கிலோ வெள்ளி ₹27,255 ஆக இருந்தது. தற்போது அது ₹1,20,000 ஐ தாண்டியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் வெள்ளியின் விலை 300% க்கும் மேல் உயர்ந்துள்ளது. இவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும், இன்னும் வெள்ளி Undervalued நிலையில் தான் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
காரணம், அனைத்து துறைகளிலும் வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளது. ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகள், அடுத்த மூன்று ஆண்டுகளில் 535 மில்லியன் டாலர் மதிப்பிலான வெள்ளியை சேமித்து வைக்கத் திட்டமிட்டுள்ளன. இது வெள்ளியும் மவுசை இன்னும் அதிகரிக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில், தங்கம் வெறும் 1% விலையேற்றம் பெற்ற நிலையில், வெள்ளி 8% ஏற்றத்துடன் மின்னியது. எனவே, தங்கத்தை அதிக விலையில் வாங்குவதற்கு பதில் வெள்ளியை இந்த சமயத்தில் வாங்குவது நல்ல முடிவாக இருக்கும் என்பதே பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறனர்.










