இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அடுத்த திரைப்படத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்ட்டார் ரஜினிகாந்த் என இரண்டு லெஜெண்டுகள் இணையப்போவதாக சினிமா வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பேசப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர் உட்பட பலர் நடித்து சமீபத்தில் ’கூலி’ திரைப்படம் வெளியானது. படம் சூப்பர், சுமார் என கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனாலும், தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக, திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் 404 கோடி ரூபாய் வசூலித்து, ‘கூலி’ திரைப்படம் சாதனை படைத்திருப்பதாக ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் நேற்று போஸ்ட்டர் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், புதிய பேச்சு ஒன்று சலசலக்க ஆரம்பித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கவிருப்பதாகவும், அப்படத்தை கமலின் Raaj Kamal Films International நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. வயதான இரண்டு கேங்ஸ்ட்டர்களை மையமாக வைத்து இப்படத்தின் கதை இருக்குமென கூறப்படுகிறது.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய லோக்கேஷ் கனகராஜ், ”ரஜினியும் கமலும் சேர்ந்து நடிப்பது என் கையில் இல்லை. அது அவர்கள் மனசு வைத்தால்தான் நடக்கும். கொரோனா காலகட்டத்திற்கு முன் அந்த ஐடியா இருந்தது. ஆனால் அது கைகூடவில்லை. ஒருவேலை அப்படி நடந்தால், என்னுடைய மற்ற வேலையெல்லாம் விட்டுவிட்டு அதைத்தான் முதலில் செய்வேன்” என்று கூறியிருந்தார்.

கூலி’ திரைப்படத்திற்கு பிறகு ’கைதி பாகம்-2’ திரைப்படத்தை லோக்கேஷ் கனகராஜ் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், அபூர்வ ராகங்கள், தப்பு தாளங்கள், நினைத்தாலே இனிக்கும் என பல படங்களில் கிளாசிக் காம்போவாக இருந்த ரஜினி-கமல் கூட்டணி 46 வருடங்களுக்கு பின் இணையப்போவதாக செய்தி வெளியாகியிருப்பது சினிமா ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.









