வணிகம்

நயன்தாராவுக்கு புதிய தலைவலி? ரூ.5 கோடி கேட்டு AP International வழக்கு..

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படத்தில் ‘சந்திரமுகி’ பட காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.5 கோடி இழப்பீடு கோரி AP International வழக்கு தொடர்ந்துள்ளது.

விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமண ஆவணப்படத்தை Netflix உடன் இணைந்து Dark studio தயாரித்தது. இந்த ஆவணப்படம் 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் Netflix OTT தளத்தில் வெளியிடப்பட்டது. அந்த ஆவணப்படத்தில்,நயன்தாரா நடித்த பல படங்களின் காட்சிகள் இடம்பெற்றன. அதில், நயன்தாரா நடித்த‘நானும் ரவுடி தான்’ பட காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. ஆனால் அப்படத்தை தயாரித்த தனது வொண்டர்பார் தயாரிப்பு (Wunderbar Films) நிறுவனத்திடம் அனுமதி பெறாமல் காட்சிகளை பயன்படுத்தியுள்ளதாக, ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில், தங்களுடைய அனுமதி இல்லாமல் ‘சந்திரமுகி’ பட காட்சிகளை Netflix ஆவணப்படத்தில் நயன்தாரா பயன்படுத்தியிருப்பதாக கூறி, AP International நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ” ஆவணப் படத்தில் ‘சந்திரமுகி’ பட காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரி Dark studio நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆவணப்படத்தில் உள்ள காட்சிகளை நீக்க வேண்டும். ஆவணப்படத்தின் மூலம் ஈட்டிய லாபக் கணக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, Dark studioவுக்கும், Netflix நிறுவனத்துக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts