நிதி

பருவமழை பற்றாக்குறை கவலையளிக்கிறது: நிதி அமைச்சகம் 

பருவமழையில் நிலையற்றத்தன்மை மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் மாற்றங்கள் ஆகியவை இந்திய வளர்ச்சி மற்றும் பணவீக்கம் தொடர்பான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொருளாதாரம் தொடர்ந்து மீள்திறனை வெளிப்படுத்தி வந்தாலும், பணவீக்க அழுத்தங்களுடன் தொழில்துறை செயல்பாடுகளில் மந்தநிலை ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அதை கவனத்தில் எடுக்கவேண்டிய அவசியம் இருப்பதாகவும் மத்திய நிதி அமைச்சகம் மாதாந்திர ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

கச்சா எண்ணெய் விலை குறைவதும்,  உலகளாவிய விநியோகச் சங்கிலிச் (supply-chain) சூழல் மேம்படுவதும் சில வெளிப்புற அழுத்தங்களைக் குறைக்க உதவக்கூடும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த  அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தை உதவிய நிலையில், உலக ஆற்றல் சந்தையில் நிலவிவந்த அழுத்தம் ஜூன் 2026ல் குறைந்துள்ளதாக அது கூறியுள்ளது . 

இருந்தாலும், எண்ணெய் உற்பத்தி மற்றும் ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து நடப்பதிலும் சிக்கல்கள் நிலவி வருவதும், கூடுதலாக நிலையற்ற புவிசார் அரசியல் நிலை நீடிப்பதும், உலக வளர்ச்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. 

2026-27 நிதியாண்டின் தொடக்க மாதங்களில் பொருளாதார நடவடிக்கைகள் தங்களது வேகத்தைத் தக்கவைத்துக் கொண்டன; ஈ-வே பில் (e-way bill) உருவாக்கம், பிஎம்ஐ (PMI) குறியீடுகள் மற்றும் மின் நுகர்வு தொடர்பான குறியீடுகள் அதை உறுதி செய்வதாகவும், வேறு சில குறியீடுகளில் மந்தநிலை இருப்பதாகவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

 நீர்தேக்கங்களில் போதுமான நீர்மட்டமும், போதுமான அளவு உரங்கள் கிடைப்பதும் விவசாய நடவடிக்கைகளுக்கு சாதகமான சூழலைத் தொடர்ந்து தருகின்றன. இருப்பினும், தென்மேற்குப் பருவமழையின் பலவீனமான முன்னேற்றம் காரிஃப் பருவ விதைப்பைப் பாதித்துள்ளதுடன், பருவமழைப் பற்றாக்குறையும் கவலையளிக்கிறது  என ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. 

இந்தியா பாதுகாப்பு ஏற்பாடுகளை (buffers) வரும் ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு விஷயங்களில், நீர் மேலாண்மை முதன்மையானதாக இருக்கலாம் என அது கூறியுள்ளது.

பொது முதலீட்டு வேகம் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டுள்ளதையும், மூலதனச் செலவினம் தொடர்ந்து அதிகரித்து வருவதையும் 2026-27 ஆம் ஆண்டிற்கான ஆரம்பக்கட்ட நிலவரங்கள் காட்டுவதாக அமைச்சகம் கூறியுள்ளது.

மே 2026-இல் எட்டு முக்கியத் தொழில்துறை குறியீட்டின் வளர்ச்சியானது, ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 0.5 சதவீதமாகக் குறைந்திருக்கிறது; புவிசார் அரசியலில் நிச்சயமற்ற சூழல் இருந்தாலும் எஃகு, சிமெண்ட் மற்றும் மின்சாரத் துறைகளில் காணப்பட்ட வலுவான வளர்ச்சி, உள்நாட்டு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான நடவடிக்கைகளின் உறுதியான தன்மையை வெளிப்படுத்துவதாக அது தெரிவித்துள்ளது.

உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் மதிப்பீடு குறித்த தொடரும் கவலைகளுக்கு மத்தியிலும், இந்தியப் பொருளாதாரத்தின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை நீடித்திருப்பதை வெளிப்படுத்தும் வகையில் நேரடி அந்நிய முதலீடு (FDI) வலுவாகத் தொடர்ந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், அந்நியச் செலாவணி கையிருப்பு திருப்திகரமான நிலையில் இருந்து வெளி அதிர்வுகளுக்கு எதிரான முக்கிய பாதுகாப்பை அளிப்பதாகவும், அந்நிய மூலதன வரவை எளிதாக்குவதற்கான சமீபத்திய நடவடிக்கைகள் வெளித்துறை நிலைத்தன்மைக்கு ஆதரவளிக்கும் என்றும்  அந்த மாதாந்திர ஆய்வறிக்கை கூறியுள்ளது. 

(This article is a translated version of the original article published in Industrial Economist. Translated by Veeraselvi Mathiazhagan.)

Related Posts