கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் (KICL) நிறுவனத்தின் தலைவர் ரபிக் அகமது, Phoenix Kothari Footwear Ltd. நிறுவனத்தில் தன்னிடம் இருந்த பங்குகளை, KICL நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான ஒப்பந்தம் செய்துள்ளார்.
125 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட KICL நிறுவனம், உரம், உணவு, கல்வி, டிரோன், காலணி போன்ற பல்வேறு துறைகளில் முதலீடு செய்து வருகிறது. அதில் குறிப்பாக காலணி துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
டிசம்பர் 2, 2022 அன்று தொடங்கப்பட்ட KICL-ன் இணை நிறுவனமான Phoenix Kothari Footwear Ltd., பெரம்பலூரில் முதல் தோல் அல்லாத காலணி தொழிற்சாலையை அமைத்தது. இதன் மூலம் 2000க்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளது. மேலும் கரூரில், அடிடாஸ் நிறுவனத்தின் அடுத்த தொழிற்சாலையை அமைக்க உள்ளது.
இந்த நிலையில் KICL நிறுவனத்தின் தலைவர் ரபிக் அகமது, Phoenix Kothari Footwear Ltd. நிறுவனத்தில் உள்ள அவரது பங்குகளை, KICL நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான ஒப்பந்தம் செய்து முடித்துள்ளார். இந்த பரிவர்த்தனை Delivery Instruction Slip (DIS – டெலிவரி இன்ஸ்ட்ரக்ஷன் ஸ்லிப்) மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ஒரு பங்கு விலை ரூ.12.7 என, மொத்தம் ரூ.99.06 கோடி மதிப்பிலான பங்குகளை KICL நிறுவனத்திற்கு வாங்கியுள்ளார். இந்த நடவடிக்கை, காலணித் துறையில் KICL நிறுவனத்தின் நிலையை மேலும் வலுப்படுத்தும்.
இந்த பங்குகளின் மாற்றத்திற்குப் பிறகு, Phoenix Kothari Footwear Ltd. நிறுவனம், KICL-ன் இணை நிறுவனமாக (Associate Company) மாறியுள்ளது. KICL நிறுவனத்தின் தலைவர் மற்றும் புரமோட்டராகவும், அதே நேரத்தில் Phoenix Kothari Footwear Ltd. நிறுவனத்தில் இயக்குநராகவும் இருக்கும் ரபிக் அகமது உள்ளதால், இது நிறுவனத்திற்குள் நடைபெறும் பரிவர்த்தனையாக (Related Party Transaction) கருதப்படுகிறது. இந்த தகவலை KICL நிறுவனத்தின் புரமோட்டஸ் மற்றும் பங்குதாரர்களின் அனுமதி பெற்று பங்குச் சந்தைக்கு அளித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









